இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று மாலை ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை முடிவில் பேசிய பிரதமர் மோடி, ``கொரோனா முதல் அலையை கடந்துவிட்டோம், தற்போது 2வது அலையை எதிர்த்து நாம் போரிட வேண்டும். முதல் அலையை விட 2ம் அலை பரவல் வேகமாக நடந்து வருகிறது. இதனால் நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாகி வருகிறது. பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களும் தீவிரமாக செயல்பட வேண்டும். அதற்காக முழு ஊரடங்கு போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இரவு நேர ஊரடங்கு போன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது.
கொரோனா பரிசோதனையை மாநிலங்கள் தீவிரப்படுத்த வேண்டும். 70% ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்வதே நமது இலக்காக இருக்க வேண்டும். கூடுதல் பரிசோதனையால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்குமே என்ற பயம் வேண்டாம். பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தாலும் பரிசோதனையை மட்டும் நிறுத்த வேண்டாம். பரிசோதனை மாதிரிகளை சரியாக சேகரிப்பதும், தொற்று கண்டறிதலும், கண்காணித்தலுமே பரவலை தடுக்கும் வழிகள்.
தடுப்பூசியைப் பொறுத்தவரை எந்த மாநிலத்துக்கு அதிக தேவை இருக்கிறதோ அதற்கேற்ப விநியோகிக்க வேண்டும். ஏப்ரல் 11 முதல் 14ம் தேதிவரை தடுப்பூசித் திருவிழா நடத்த வேண்டும். அந்த நாட்களில், தகுதியானவர்களில் பெரும்பாலனவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.