புதுக்கோட்டை மாவட்டத்தில், பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரிக்குப் பாதுகாப்பாகக் வைக்கப்பட்டு, அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதிக்குட்பட்ட மாத்தூர் பகுதியிலுள்ள 27-வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட முகவர்கள் கையெழுத்துடன் கூடிய பேப்பர் சீல் ஒன்று வாக்கு எண்ணும் மைத்துக்கு வெளியே கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விராலிமலை தொகுதி திமுக, அமமுக, மநீம வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதா என்று சந்தேகித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான உமா மகேஸ்வரியிடம், சீல் பேப்பரை காண்பித்து புகார் தெரிவித்தனர். அதற்கு ஆட்சியர் வி.வி.பேட் கருவியிலிருந்து சேகரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளுக்கு வைக்கப்படும் சீல்தான் என்றும், வாக்குப்பதிபு இயந்திரத்திற்கான சீல் அல்ல என விளக்கம் அளித்துள்ளார். இதனை ஏற்க மறுத்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபடமுயன்றனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்டத் தேர்தல் பொதுப் பார்வையாளர் ரகு, விராலிமலைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணி ஆகியோர் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட அறையின் சீலை உடைத்து, சந்தேகத்துக்குப்படுத்தப்பட்ட 27-வது வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தை காண்பித்தனர்.
27-வது வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரம் சீல் பிரிக்காமல் இருந்ததை அடுத்து, அவர்களின் சந்தேகம் தீர்ந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் நிம்மதியுடன் திரும்பினர்.