பிரான்சிடமிருந்து இந்தியா வாங்கியுள்ள ரஃபேல் போர் விமானத்தில் பல்வேறு சர்ச்சைகள் தொடக்கத்திலிருந்தே எழுந்துள்ளன. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என 126 விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதையடுத்து பாரதி ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தது. இதில் 126 விமானங்களுக்குப் பதிலாக ஒரு விமானத்தின் விலை 1,670 கோடி ரூபாய் என்று 36 விமானங்கள் வாங்குவதற்கு 2016-ம் ஆண்டு செப்படம்பர் மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தமானது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் போடப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. பிரதமர் மோடியை திருடன் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். இந்தநிலையில், ரஃபேல் விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த இடைத் தரகருக்கு 8.62 கோடி ரூபாய் லஞ்சத்தை ரஃபேல் போர்விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம் கொடுத்துள்ளதாக ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகத்தில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிரான்ஸ் நாட்டின் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், இந்தியாவைச் சேர்ந்த டெஃப்சிஸ் நிறுவனத்துக்கு 8.62 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இருப்பினும், டசால்ட் நிறுவனம் மீது அந்த நாட்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. இதுகுறித்து ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகத்தில் செய்தி வெளியாகி இருந்தது.
தற்போது இதே செய்தி நிறுவனம் இதன் மூன்றாம் கட்ட புலானய்வு அறிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. அதில் டசால்ட் நிறுவனத்துக்கு இடைத்தரராக செயல்பட்டவரை வெளிப்படையாக சொல்லியுள்ளது. அவர் வேறு யாருமல்ல, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் அமலாக்கத்துறையால் குற்றம் சுமத்தப்பட்ட சுஷென் குப்தா தான்.
ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் உள் விவாதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து வாங்கிய இந்த சுஷென் குப்தா, பிரான்ஸ் ரஃபேல் போர் விமான நிறுவனமான டசால்ட் ஏவியேஷனுக்கு கொடுத்து கமிஷன் வாங்கியுள்ளார்.
குப்தா கொடுத்த அந்த ரகசிய ஆவணங்களை வைத்து , டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ரஃபேல் விமானங்களின் விலையை, முந்தைய ஒப்பந்தத்தைக் காட்டிலும் அதிகளவில் ஏற்றி வைத்து விற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் இந்திய அரசியலை புரட்டி போட்டு வரும் நிலையில் குப்தா உள்ளிட்ட யார் மீதும் அமலாக்கத்துறை தனது பூர்வாங்க நடவடிக்கையை இதுவரை தொடங்கவில்லை எனத் தெரிகிறது. இதேபோல் மத்திய அரசும் ஒரு ரியாக்சனும் இல்லாமல் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.