உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று சீனாவின் அலிபாபா நிறுவனம். இதன் நிறுவனர் ஜாக் மா. சமீபத்தில் ஜாக் மா தலைமறைவாகிவிட்டார் என்று செய்திகள் வெளியானது. அதற்கேற்ப சில நாட்கள் கழித்தே அவர் வெளியுலகில் தோன்றினார். அவரின் திடீர் தலைமறைவுக்கு பின்னணியில் சீன அரசு கொடுத்த குடைச்சல் தான் காரணம் என்று கூறப்பட்டது. சீன அரசின் வங்கித்துறை குறித்து ஜாக் மா பொதுவெளியில் பேச, அது ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசுக்கு பிடிக்காமல் போக முட்டல் மோதல் தொடங்கியது.
இதனால் ஜாக் மாவின் அலிபாபா நிறுவனத்தை குறிவைத்து சீன அரசு தாக்குதல் நடத்தியது. அதன்படி அலிபாபா நிறுவனத்தின் மோனோபொலி கொள்கையை கையிலெடுத்தது. இந்த மோனோபொலி கொள்கை என்பது, அலிபாபா நிறுவனத்துக்கு பொருள்கள் விற்கும் எந்த ஒரு நிறுவனமும் அதேபொருளை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்க முடியாது. அதேபோல் வேறு நிறுவனங்களில் விற்பனை செய்யும் எந்த ஒரு பொருளையும் அலிபாபாவில் விற்க முடியாது.
இந்த கொள்கை அரசின் விதிமுறைக்கு எதிராக இருக்கிறது என்று சம்மன் அனுப்பிய சீன அரசு இதன் விசாரணை முடிவில், தற்போது அலிபாபா குழுமத்துக்கு பெரிய தொகை ஒன்றை அபராதம் விதித்துள்ளது. அந்த தொகை எவ்வளவு தெரியுமா... 18 பில்லியன் யுவான் (2 பில்லியன் டாலர்கள்). இந்திய மதிப்பில் சுமார் 20,550 கோடி ரூபாய். குற்றச்சாட்டுக்கு உள்ளான கடந்த 2019 ஆம் ஆண்டில் அலிபாபா குழுமம் ஈட்டிய வருமானத்தில் 4 சதவீதம் தான் இந்த அபராதம்.