இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகத்தால் அந்த அறிக்கை இந்தாண்டு வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், `` படைகள் பின்வாங்கினாலும் இந்தியா-சீனா எல்லை பதற்றங்கள் அதிகமாகவே இருக்கின்றன. எல்லை மோதலை அமெரிக்கா நெருக்கமாகப் கண்காணித்து சீனாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டித்துள்ளது. இந்தியா கோரிய சில ராணுவ தளவாடங்களையும் வழங்கி உள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் “சாத்தியமில்லை” என்றாலும், அவர்களுக்கு இடையிலான நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இதனால் போர் ஏற்படும் சூழல் ஏற்படும். இருநாடுகளிடையே உள்ள சிக்கல்களால் பதற்றம் மேலும் அதிகரித்தால் போர் மூளும் அபாயம் உள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சீனா தனது வலிமையை நிரூபிக்கவும், பிராந்திய அண்டை நாடுகளை சீனாவின் விருப்பங்களை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தவும் ஒருங்கிணைந்த, முழு அரசாங்க கருவிகளையும் பயன்படுத்த முற்படுகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.