அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் எதிர்கட்சிகள் போக்கு காட்டி வருகின்றனர் என கூறி கடுப்பான சிவசேனா எம்.எல்.ஏ ஒருவர் கொரோனா வைரஸ் கையில் சிக்கினால் தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போடுவேன் என சர்ச்சையாக பேசியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா முதல் அலையும் சரி, இரண்டாவது அலையும் சரி அதிக அளவில் பாதித்த ஒரே மாநிலம் மகாராஷ்டிரா தான். அம்மாநில மக்கள் பலர் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பலியாகியுள்ளனர். மராட்டியத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுபடுத்த அம்மாநில அரசு முழுவீச்சில்செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, நாடு முழுவதும் 2-வது கொரோனா அலை உருவாக மத்திய அரசு, தேர்தல் ஆணையமே காரணம் என சிவசேனா குற்றம் சாட்டி இருந்தது. இந்தநிலையில் புல்தானா சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சஞ்சய் கெய்வாட் கூறுகையில், ``அரசியல் செய்ய இது தான் நேரமா?.
இதுபோன்ற துயரங்களில் அரசியல் செய்ய பிரதமர் மோடியும், தேவேந்திர பட்னாவிசும் வெட்கப்பட வேண்டும். நோய் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மந்திரிகளும் கடுமையாக உழைத்து வரும் போது, எதிர்க்கட்சியினர் உதவி செய்வதைவிட்டுவிட்டு எங்களது முயற்சிகளை கெடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.
தேவேந்திர பட்னாவிஸ் மராட்டிய முதல்-மந்திரியாக இருந்தால், மோடி இப்படி செய்வாரா?.
எங்கள் அரசு தோல்வி அடைந்ததாக காட்ட முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். ஒருவேளை எனது கையில் கொரோனா வைரஸ் கிடைத்தால், அதை தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போடுவேன். அந்த அளவுக்கு நான் அவரை வெறுக்கிறேன் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.