மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பலர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
இன்று மதியம் அரேபிய கடலில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் நினைவுச்சின்னத்தின் பூஜைக்கு பயணம் மேற்கொண்டபோது மும்பை நரிமன் பாயிண்டிலிருந்து 2.5 கி.மீ. மேற்கே சென்றுகொண்டிருந்தபோது படகு கவிழ்ந்ததாக முதல்கட்டத் தகவலில் தெரிந்துள்ளது.
பிரம்மாண்ட சிவாஜி சிலை அமைப்பதற்குத் தேர்வாகியுள்ள இடம் அருகே படகு கவிழ்ந்திருக்கிறது. விபத்துக்குள்ளான படகு மகாராஷ்டிர அரசுக்குச் சொந்தமானதாகும்.
விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக கடலோரக் காவல்படையின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். ஆனால் குறைந்தபட்சம் 40 ஊடகவியலாளர்கள், தொலைக்காட்சி குழுவினர் மற்றும் அதிகாரிகளை சுமந்து சென்ற வேக படகில் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக மாநில அரசாங்கம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் விழாவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது