கோடை ஆரம்பித்து விட்டது. வெயில் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இன்னும் சில நாள்களில் பகலில் வெளியில் செல்லவே யோசிக்க வைக்கும் அளவுக்கு வெயில் தீவிரமாகிவிடும்.
'விளம்பரம் வரும் முன்னே; கோடை வரும் பின்னே' என்று கூறுமளவுக்கு, குளிர்பான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் வரத் தொடங்கிவிட்டன. திரையுலக மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள், "நான் இதைத்தான் அருந்துகிறேன்," என்று ஒவ்வொரு பன்னாட்டு குளிர்பான பாட்டிலை தூக்கிப் பிடித்து கூறப்போகின்றனர்.
ஆனால், இயற்கையோடு ஒன்றிய வகையில் கோடைக்காலத்தை எதிர்கொள்ள உதவுவது, எலுமிச்சைதான்! 'லெமன்', கோடை வந்தாலே பரவலாக உச்சரிக்கப்படும் வார்த்தை.
ரிபோஃப்ளேவின், தையமின், மெக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6 என்று பல ஊட்டச்சத்துகள் எலுமிச்சையில் உள்ளன. இவ்வளவு சத்துகளும் அடங்கியிருப்பதால் மட்டுமின்றி, தயாரிக்க எளிதான ஒன்று என்பதற்காகவும் 'லெமன் வாட்டர்' என்று அழைக்கப்படும் எலுமிச்சை சாற்றை அனைவரும் பருகுகிறோம்.
எலுமிச்சையின் சத்து எதில் உள்ளது?
வழக்கமாக, எலுமிச்சை பழத்தை துண்டுகளாக நறுக்கி, அவற்றை பிழிந்து தண்ணீர் கலந்து விட்டு, தோலை வீசி எறிந்து விடுவோம். எலுமிச்சை சாற்றினை தண்ணீர் கலந்து பருகுவதே காலங்காலமாக புழக்கத்தில் உள்ளது.
இயற்கை முறையில் விளைந்த எலுமிச்சையை வாங்கி, நன்கு கழுவி விட்டு, துண்டுகளாக நறுக்க வேண்டும். துண்டுகளை தண்ணீர் அல்லது வெந்நீரில் பிழிய வேண்டும். பிழிந்த பின்னர், வீசியெறிந்து விடாமல், தோலை சிறு துண்டுகளாக நறுக்கி அந்த தண்ணீரில் அல்லது வெந்நீரில் போட வேண்டும்.
எலுமிச்சையின் பெரும்பாலான சத்துகள் அதன் தோலில்தான் உள்ளன. ஆன்ட்டிஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் சி மற்றும் பி, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கும் சத்து ஆகியவை எலுமிச்சையின் தோலில் நிறைந்துள்ளன.
மீதமான எலுமிச்சை துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் அல்லது வெந்நீர் ஊற்றி வைத்து விட்டால், பின்னர் தேவைப்படும்போது எடுத்து அருந்தலாம்.
ஆகவே, இனி எலுமிச்சை சாறு பிழிந்ததும் தோலை வீசியெறிந்து விடாதீர்கள்; அதில்தான் அதிக சந்துகள் உள்ளன. ஆகவே, தோலையும் நறுக்கி பயன்படுத்துங்கள்; எலுமிச்சையின் முழு பலனை பெற்றிடுங்கள்!