'உலகம் உள்ளங்கையளவு'. இன்றைய தகவல் தொழில்நுட்ப வசதி உலகை சுருக்கி விட்டது. உலகின் ஒரு மூலையிலிருப்பவர் இன்னொரு மூலையில் இருப்பவரோடு தொடர்பு கொள்வது, பேசுவது எளிதாகி விட்டது. உலகமயமாதலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நாட்டின் எல்லை கடந்து தொழில் நிறுவனங்களை கால் பதிக்கச் செய்கி்ன்றன.
ஏதோ ஒரு நாட்டிலுள்ள நிறுவனத்திற்கு ஏதோ ஒரு நாட்டில் பணியாளர் வேலை செய்து கொண்டிருக்கிறார். நாடுகளின் புவியியல் அமைவிடத்திற்குத் தக்க நேர மாற்றமும் இருக்கிறது.
சில நிறுவனங்கள் மூன்று பணிவேளைகள் (ஷிப்ட்) இயங்குகின்றன. இரவு பணி தவிர்க்க முடியாத ஒன்றாகி போனது. பொருளாதார நோக்கில் இரவு பணி தவிர்க்க முடியாதது. சில நிறுவனங்கள் இரவு பணிக்கு கூடுதல் வசதிகளும் தருகின்றன.
உடல் நல நோக்கில் இரவு பணி எத்தகையது என்று பார்த்தால், கேடு என்ற பதிலே கிடைக்கிறது. பொதுவாக உயிரினங்கள் அனைத்திற்கும் உடல் குறிப்பிட்ட நேர கணக்கில் இயங்கி கொண்டிருக்கும். இதை சிர்காடியன் ரிதம் என்கின்றனர். இந்த அமைப்பின்படி உடல் இரவில் உறங்க வேண்டும். ஆனால் இரவு பணி செய்வோர் இந்த ஏற்பாடுக்கு மாறாக விழித்திருக்க வேண்டியதுள்ளது. உடலின் இயக்கத்தில் மாறுபாடு ஏற்படுவதால் தூக்கம் கெடுகிறது. ஆகவே தொடர்ந்த இரவு பணி, மனசோர்வை அளிக்கிறது. பகலில் இயங்கும் சமுதாயத்துடன் பழக இயலாமல் இரவில் விழித்திருப்பது மகிழ்ச்சியை தடுப்பதால் மனநல பாதிப்பை உருவாக்கக்கூடும். இரவு நேரத்தில் கிடைப்பதை உண்டு ஆரோக்கியமான உணவுகளை இழப்பதால் உடல் பருமனாகிறது.
தொடர்ந்து இரவு பணி செய்யும் பெண்களுக்கு வழக்கத்தைவிட விரைவிலேயே மாதவிடாய் (மெனோபாஸ்) நிற்கும் அபாயம் உள்ளது. இதனால் இதய கோளாறு மற்றும் ஞாபக மறதி ஆகிய பாதிப்புகள் நேரிடுகின்றன.
கர்ப்பிணி பெண்களுக்கு இரவு பணி உகந்ததல்ல என்று டென்மார்க்கில் செய்யப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இரவு பணி செய்யும் கர்ப்பிணிகள் செயற்கை வெளிச்சத்தில் இருக்கின்றனர். அதனால் முன்பு கூறியதுபோல் சிர்காடியன் ரிதம் என்னும் உடல் ஒத்திசைவு தடுமாற்றத்துக்குள்ளாகிறது. மெலட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியாவதும் தடைபடுகிறது. இதனால் கரு வளர்ச்சியும் பாதிப்படைகிறது. எட்டு வாரத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் வாரத்திற்கு இரண்டுக்கு மேற்பட்ட இரவுகளில் பணி புரிந்தால் கருச்சிதைவு ஏற்படக்கூடிய வாய்ப்பு 32 விழுக்காடு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இரவு பணி செய்வோர் உடல் நலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.