மும்பையைச் சேர்ந்த அப்துல்லா கான் என்ற இளைஞர்க்கு, உலகின் சிறந்த மென்பொருள் நிறுவனமான கூகுள் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது.
அப்துல்லா தன்னுடைய பள்ளிப் படிப்பை சவூதி அரேபியாவில் முடித்த பிறகு, இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களான ஐஐடி கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிக்க விரும்பினார்.
அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் மிகவும் கடினமானது ஐஐடி தேர்வு. 10ல் 4 மாணவர்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். இந்நிலையில், ஐஐடி தேர்வில் அப்துல்லா தோல்வி அடைந்தார். அதனால், ஆர் திவாரி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தார்.
படிப்பின் இடையில், ஆன்லைனில் நடத்தப்படும் மென்பொருள் தொடர்பான இணையத் தேர்வில் அப்துல்லா கலந்து கொள்வது வழக்கம். அதேபோல், கூகுள் நடத்திய ஆன்லைன் தேர்வில் சென்ற ஆண்டு கலந்து கொண்டார். முதல் சுற்றில் தேர்ச்சி பெற்ற அப்துல்லாவுக்கு, நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு லண்டனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அங்கு சிறப்பாக செயல்பட்ட அப்துல்லாவுக்கு, உடனே பணி ஆணையைக் கூகுள் வழங்கியது. ஆண்டுக்கு, ரூ.1.2 கோடி சம்பளத்துடன் கூகுளில் நிறுவனத்தில் வேலை செய்யவுள்ளார் அப்துல்லா. இவரின் அடிப்படை ஊதியம் ஆண்டுக்கு ரூ.54.5 லட்சம் அதோடு, ரூ.58.9 லட்சம் போனஸ் ஆக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய அப்துல்லா கான், கூகுள் நிறுவனத்தின் பணியாற்றும் வாய்ப்பை எதிர்பார்க்கவில்லை. ஒரு அனுபவத்திற்காக மட்டும் தான் நேர்காணலில் பங்கேற்றேன். ஆனால் எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று பூரிப்பாகக் கூறினார்.