பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் ஏப்ரல் 12 மற்றும் 13-ந் தேதிகளில் தமிழகம் வருகிறார். துணை முதல்வர் ஓ .பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மத்திய அரசின் விழாக்களுடன் பாஜக சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். தேதி அறிவிக்கப்பட்ட பின் கடந்த 15-ந் தேதி சென்னை அடுத்த வண்டலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி மேடையேறினார்.
அடுத்த கட்டமாக வரும் ஏப்ரல் 8-ந்தேதி பிரதமர் மோடி கோவை பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பயணத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு ஏப்ரல் 12 மற்றும் 13-ந் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 12-ந் தேதி கோவையில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்துப் பேசும் பிரதமர் மோடி, கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிக்கிறார்.
மறுநாள் ஏப்ரல் 13-ந் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து தேனியில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தென் மாவட்டங்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து பிரதமர் மோடி பேசுகிறார்.
தேனி மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவிகேஎஸ்.இளங்கோவனும், அமமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், தொகுதியில் ஏற்கனவே பிரபலமானவருமான தங்க.தமிழ்ச்செல்வனும் போட்டியிடுவதால் அங்கு மும்முனைப் போட்டியில் தேர்தல் களம் அதகளப்படுகிறது.
இதனால் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகனுக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதானது அல்ல பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் தான் ஓபிஎஸ் ஸ்பெஷலாக தேனி தொகுதிக்கும் பிரதமர் மோடி விசிட் செய்கிறார் என்று கூறப்படுகிறது.