வாக்கிங் 'சரியா' போறீங்களா? 

"டாக்டர் வாக்கிங் போக சொல்லியிருக்காரு?" ஒன்று நம்மிடம் யாராவது இப்படி கூறுகிறார்கள். இல்லையென்றால் நாம் யாரிடமாவது இப்படி கூறுகிறோம். "நாங்கெல்லாம் தினமும் ஆறு மைல் நடந்துதான் படிச்சோம்.." இப்படி சொல்லும் தாத்தாக்கள் இல்லாத தலைமுறை இது!
 
நடப்பதை கேவலமாக, இல்லையென்றால் அசௌகரியமாக கருதி, உடல்நலத்தை கெடுத்துக்கொண்டு பின்னர் சிகிச்சைக்காக வாக்கிங் போவதையே பார்க்கிறோம்.
"நான் வாக்கிங் போறேன்... ஆபீஸ் ரூம்ல இருந்து காருக்கு... கார்ல இருந்து கடைக்குள்ளே... அந்த மாலில் இருந்து காருக்கு... பிறகு காரிலிருந்து வீட்டுக்கு..." என்றார் ஒருவர். ஆம், நடத்தல் என்ற செயலே இல்லாததாக சமுதாயம் மாறி எவ்வளவோ நாள் கடந்து விட்டது.
 
'நடை பயிற்சி' செய்வது நல்லது. ஆனால், சரியாக செய்கிறோமா என்பதையும் கவனிக்க வேண்டும்.
 
நேர்கொண்ட பார்வை
 
கடற்கரை ஓரமாக ஒருவர் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். காதுகளில் இயர்போன்... கையில் மொபைல் போன். அவ்வப்போது இடக்கையை தூக்கி போனை பார்ப்பது என்று போய்க்கொண்டிருந்தார். இது 'வாக்கிங் போனேன்... ஆனா போகலை' ரகம். இதுபோன்று நடப்பதால் எந்த நற்பலனும் கிடைக்கப்போவதில்லை. சரியானபடி நடக்காவிட்டால் உடலுக்குப் பாதிப்பு நேரலாம்.
 
நடை பயிற்சி செய்யும்போது கீழே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தலையை நேராக வைத்து குறைந்தது 20 அடி தூரத்திற்கு முன்பு பார்வையை செலுத்துங்கள். தோள்பட்டைக்கு நேராக காதுகள் இருக்கும்படியாக தலை நிற்கவேண்டும். தலை முதல் பாதம் வரை சீராக இருக்க வேண்டும். முதுகை வளைக்காமல் நடப்பது பயன் தரும்.
நிமிர்ந்த நன்னடை
 
நடக்கும்போது தோள்களை தளர விட வேண்டும். தோள்களை ஒருமுறை சுருக்கி பின்னர் இயல்பு நிலைக்கு தளரவிடுங்கள். நெஞ்சை நிமிர்த்துங்கள். மனஅழுத்தத்தோடு இருந்தால்தான் தோள் உயர்ந்திருக்கும். அப்படி வைத்துக்கொள்ளலாமல் இயல்பாக இருக்கும்படி தளர்த்தி, தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நடக்க வேண்டும்.
கை வீசம்மா... கை வீசு
 
ஏனோதானோவென்று நடக்கக்கூடாது. கைகளை தளர விட்டு, நன்றாக வீசி நடக்க வேண்டும். இடக்கை முன்னால் போகும்போது வலக்காலும் முன்னே செல்ல வேண்டும். அப்படியே வலக்கை முன்னால் போகும்போது இடக்கால் முன்னால் இருக்க வேண்டும். இப்படி கையும் காலும் ஒத்திசைவாக இயங்கும்படியே நடை பயிற்சி செய்ய வேண்டும்.
இறுக்கமான அடிவயிறு
 
நடுப்பாகமான கழுத்து முதல் இடுப்பு வரையிலுள்ள பகுதியே உடலை நிலையாக நிறுத்தக்கூடியது. நடை பயிற்சி செய்யும்போது, அடிவயிற்று தசைகளை இறுக்கமாக வைத்துக்கொண்டால், உடலில் நடுப்பகுதிக்கு போதிய பங்களிப்பு கிடைக்கும்.
லெப்ட்... ரைட்... லெப்ட்...
 
நடை பயிற்சியின்போது கால்களின் இயக்கத்தின்மேல் கவனம் வையுங்கள். இடுப்பு சரிவாக இல்லாமல் நேராக இருக்கவேண்டும். கால்களின் முழங்கால்மூட்டுகள் சரியானபடி உயர்ந்து மடங்க வேண்டும். மூட்டுப்பகுதி நன்றாக உயர்ந்து, சரியானவிதத்தில் மடங்கும்படி கால்களின் செயல்பாடு இருக்கும்படி கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
 
மலர்போன்றதா பாதம்?
 
 
பாதத்தை கீழே ஊன்றுவதும் முக்கியமான விஷயம். குதிங்கால் தரையில் முதலில் ஊன்றப்பட வேண்டும். அப்போது பாதத்தின் நுனி ஏறக்குறைய 45 பாகை (டிகிரி) சரிந்திருக்கவேண்டும். பின்னர், முழு பாதமும் தரையில் பட வேண்டும். அதன்பின்னர், பாதத்தின் முன்பகுதியை நன்றாக ஊன்றி, உடலை தூக்கி அடுத்த அடியெடுத்து வைக்க வேண்டும்.
 
நடை பயிற்சி செல்லும் போது அதற்கு உகந்த தளர்ந்த உடையணியவேண்டும். பொருத்தமான மிருதுவான காலணி (ஷூ) அணிந்து நடப்பது எதிர்பார்க்கும் பலனை தரும்.
Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்