சமர்த்தும் சண்டை கோழியும்: பிள்ளைகளை எப்படி சமாளிப்பது?

How do I nurture both the easy and difficult child : Parenthood

by SAM ASIR, Jun 7, 2019, 10:10 AM IST

'இவன் சொன்ன பேச்சை கேட்டுப்பான்... இவன் தங்கச்சி இருக்காளே அப்பப்பா!' - பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இதேபோன்ற அங்கலாய்ப்புகளை கேட்க முடியும். தங்கள் இரு பிள்ளைகளின் சுபாவங்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிராய் இருப்பதாய் பெற்றோர் கூறுவர்.

ஒரே பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள் ஏன் வேறு வேறு குணங்கள் கொண்டவர்களாய் இருக்கின்றனர்? இதற்கு எந்த வரையறையும் இல்லை. மூத்த குழந்தை;இளைய குழந்தை. பையன்; பெண் என்ற எந்த வேறுபாட்டையும் பொருத்தி இந்த பிரச்னையை பார்க்க இயலாது.

உடன்பிறப்புகளும் ஒத்துப்போகாத பண்புகளும்

அவன் 'இப்படி' என்றால் நான் 'அப்படி' என்ற மனப்பான்மையே பிள்ளைகள் தங்கள் உடன்பிறப்புகளிடமிருந்து குணத்தால் வேறுபட காரணமாக இருக்கிறது என்று குழந்தை வளர்ப்பு நிபுணர்களான அடேல் ஃபேபர், எலைன் மஸ்லிஷ் ஆகியோர் தங்கள் புத்தகத்தில் எழுதியுள்ளனர். உதாரணமாக மூத்த பெண், நன்றாக படிக்கக்கூடியவளாக, பள்ளியில் பல்வேறு சான்றிதழ்களை, பாராட்டுகளை பெறுவதாக இருந்தால், இளைய பெண், "நான் அவளைப் போலல்ல; நான் வித்தியாசமானவள்" என்று காட்டுவதற்காகவே பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக்கூடும் அல்லது விளையாட்டு போன்ற கல்வி தவிர்த்த வேறு துறையில் திறமையை காட்ட முயற்சிக்கலாம்.

இதுபோன்ற கணிப்புகள் அப்படியே உண்மையாக இருக்கவேண்டும் என்பதல்ல. ஒரே வீட்டில் உள்ள சகோதரர்கள், சகோதரிகளின் பண்புகள் நேர் எதிராக இருப்பதற்கு வேறு காரணங்களும் இருக்கக்கூடும். ஆனாலும், பெற்றோர் மத்தியில் "ஏன் எங்கள் பிள்ளைகள் வேறு வேறு குணங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்?" என்ற கேள்வி இருந்து கொண்டேதான் உள்ளது.

பெற்றோரின் கவனத்திற்கு

'என் ஒரு குழந்தைமேல் நான் அதிக பாசம் காட்டுவதாக மற்ற குழந்தை நினைக்க ஏதுவுண்டா?'

'ஒவ்வொரு குழந்தையையும் அதனதன் தனித்தன்மையுடன் வளர விடாமல், நான்தான் இப்படி முத்திரை குத்துகிறேனா?'

'என் மகன் /மகள் பெற்றோராகிய நாங்கள் அவனை / அவளை குறித்து என்ன பேசுகிறோம் என்று நினைக்கிறான்(ள்). அது அவனை /அவளை பாதிக்குமா?'
இந்தக் கேள்விகளை பெற்றோர் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஏனெனில் எல்லா பெற்றோருமே தங்கள் பிள்ளைகளுக்கு சம அளவில் பாசம் காட்டி, ஒரே விதமாக கையாண்டு வளர்க்கவேண்டும் என்றுதான் விரும்புவர். ஆனால், எல்லா பிள்ளைகளிடமும் ஒரே விதமாக நடப்பது என்பது இயலாத காரியம்.

ஒரு பிள்ளை எல்லாவற்றையும் கேள்வி கேட்பவளாக, ஒத்துழைக்க மறுப்பவளாக, அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பவளாக இருந்தால், "ஏன் இவள் தன் தங்கைபோல் சமர்த்துப் பெண்ணாக இல்லை?" என்ற கேள்வி பெற்றோருக்குள் எழுவது இயற்கை.
ஆம், ஒவ்வொரு குழந்தையுமே தனித்துவத்துடன்தான் பிறக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அதைப் புரிந்து கொண்டு பெற்றோர் செயல்பட வேண்டும். இதில் பெற்றோரின் பொறுப்பு மிகவும் முக்கியமானது; கடினமானதும்கூட.

மாற்றப்பட வேண்டிய பார்வை

குழந்தைகளை குறித்து சமநிலை பார்வை கொண்ட பெற்றோரில் ஒருவர், "என்னுடைய பையன் கொஞ்சம் துறுதுறுவென்று இருப்பான்" என்று கூறுகிறார். இன்னொருவர், "என்னுடைய மகள் அவளாகவே யோசிக்கக்கூடியவள். வளரும்போது அதைச் செய் இதைச் செய் என்று யாரும் அவளை வலியுறுத்தமுடியாது," என்கிறார். மற்றொருவரோ,"ஏன் என் குழந்தை இவ்வளவு கீழ்ப்படிதல் உள்ளவளாக இருக்கிறாள் என்று தெரியவில்லை" என்று அங்கலாய்க்கிறார்.

'நீ சமர்த்துல்லே... சொன்ன பேச்சை தட்டமாட்டியே' - இப்படி சொல்லி சொல்லியே குழந்தையை வளர்த்தால் அந்த மனப்பாங்கையே அது பெற்றுவிடும். நாம் கீழ்ப்படிய வேண்டும். அம்மா, அப்பாவின் பேச்சை தட்டக்கூடாது என்ற எண்ணம் குழந்தையின் மனதில் வலுவாக பதிந்துவிடும். அதன்பிறகு அதனால் இயல்பான குழந்தையாக இருக்க இயலவில்லை. குழந்தைகளின் குறும்பு அக்குழந்தையிடம் வெளிப்படாது.

மாறாக, "நீ என்னைக்கு என் பேச்சை கேட்டிருக்கே... நீ பிடிவாதம் பிடிச்சவ..." என்று கூறி ஒரு குழந்தையை வளர்த்தால், பிடிவாதம் பிடிப்பதுதான் நம் குணம் என்ற நம்பிக்கை அக்குழந்தையின் மனதில் விழுந்துவிடும்.

'நீ ஏன் உன் அண்ணன் போல படிக்கமாட்டேங்கறே?" "உன் தம்பி அடக்கமான பையன். நீ ஏன் அப்படியில்லை?" இதுபோன்ற முதிர்ச்சியற்ற கேள்விகள், பிள்ளைகளின் மனதில் எதிர்மறை தாக்கத்தை உருவாக்கும்.

பிடிவாதம் கொண்ட குழந்தைகள் பொதுவாக மனந்தளராதவர்களாக, எளிதில் சோர்ந்துபோகாமல் போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பர். கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும் குழந்தைகள், புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பர்.
பிள்ளைகளை ஒருவரோடொருவர் ஒப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அண்ணனுடன், தம்பியுடன், அக்காவுடன், தங்கையுடம், பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன், வகுப்பு தோழர்களுடன் ஒப்பிட்டு பேசவே கூடாது. ஒவ்வொரு குழந்தையும் அதற்கேற்ற தனித்துவம் கொண்டதாகவே இருக்கும். அவர்கள் அவர்கள் விருப்பத்தின்படி படிப்பதற்கு அனுமதியுங்கள். எப்போதும் குறைசொல்லிக்கொண்டே இருப்பதை தவிர்த்து விடுங்கள். இயல்பாக வளரும் குழந்தை வெற்றிகரமான குடிமகனாக விளங்க இயலும்.

You'r reading சமர்த்தும் சண்டை கோழியும்: பிள்ளைகளை எப்படி சமாளிப்பது? Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை