வளையம் வளையமாக, சுருள் சுருளாக வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் விடப்படும் புகை எங்கே செல்கிறது? சிகரெட், பீடி போன்றவற்றை இழுக்க இழுக்க இன்பம் காண்பவர்கள் விடும் புகை, புகை பிடிக்காதவர்களுக்கும் துன்பம் தருகிறது.
புகைப்பவர்களால் விடப்படும் புகையானது பல மணி நேரம் காற்றில் இருக்கும். மட்டுமல்ல, அது இருபது அடி தூரம் காற்றில் பயணிக்குமாம். இப்படி காற்றில் கலந்திருப்பதில் எண்பது விழுக்காடு புகை கண்களுக்குத் தென்படாது; முகர்வுக்கு சிக்காது. ஆனாலும் நச்சுத்தன்மை மிக்கதாய் இருக்கும்.
புகையும் சிகரெட்டின் நுனியிலிருந்து வருவதை யார் சுவாசித்தாலும் அதிலிருக்கும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருள்கள் மற்றும் நச்சுகள் உடலினுள் சென்று தீவிர நோய்களுக்குக் காரணமாகும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடுகள் தவிர, பணியிடங்கள் மற்றும் விருந்து போன்ற கூடுகைகளில் புகை பிடிக்காதவர்களும் புகையை சுவாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், புகை பிடிப்பவர்கள் அளவுக்கே, புகைக்காதவர்களும் சிகரெட்டின் நச்சுப்புகையை சுவாசிக்கின்றனர்.
நம்மை சுற்றியிருக்கும் சிகரெட் புகை, பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் என்று அனைத்து தரப்பினருக்கு உடல்நலக்கேட்டை கொண்டு வருகிறது. உடலுக்குக் கேடு தரக்கூடிய நச்சுப்பொருள்கள் அடங்கிய புகை கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை தரக்கூடிய தாயின் தொப்புள்கொடி வழியாக கருவை சென்றடைகிறது. தாய் சுவாசித்த நிகோடின், கருவிலிருக்கும் குழந்தைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை குறைப்பதால், கருவில் வளரும் குழந்தையின் இதயம், நுரையீரல்கள், செரிமான மண்டலம் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மற்றவர்கள் விடும் புகையை சுவாசிக்கும் பெண்கள், கருப்பைக்கு வெளியே கரு உருவாதல், கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறப்பது போன்ற அவலங்களுக்கு உள்ளாகிறார்கள். கருப்பையில் இருக்கும் குழந்தை கூட வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்படுவதால், குழந்தைகள் குறைவான எடையோடு பிறக்கின்றன. இதன் காரணமாக பிறந்த பிறகு தொடர்ந்து பல நாள்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
பச்சிளங்குழந்தைகள் காரணம் தெரியாமல் உறக்கத்திலேயே உயிரிழக்கும் உயிரிழக்கும் அபாயம் (திடீர் சிசு மரணம் Sudden Infant Death Syndrome -SIDS), சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூன்று மடங்கு அதிகம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பிறக்கும் குழந்தைகளும் பல்வேறு சுவாசம் மற்றும் நெஞ்சக கோளாறு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளை கொண்டிருப்பார்கள். ஆகவே, மற்றவர்கள் புகைக்கும் இடத்தில் இருப்பதை பெண்கள் தவிர்க்கவேண்டும். வீட்டினுள் குடும்பத்தினரோ, விருந்தினரோ புகை பிடிக்க அனுமதிக்கக்கூடாது. பொது இடங்களில் புகைக்கிறவர்கள் இருக்குமிடங்களிலிருந்து பெண்கள் அகன்று போய்விடுவது நல்லது.