வீட்டை அலங்கரிப்பது என்பது ஒருபோதும் நிறைவு பெறாத வேலை! இதைச் செய்தால், அதையும் செய்திருக்கலாமே என்று தோன்றும். அதையும் செய்து விட்டால், இன்னும் ஒன்றை மட்டும் செய்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம்.
ஃபர்னிச்சர் என்னும் அறைகலன்கள், வண்ணம், அலங்கார ஓவியங்கள் என்று எல்லாவற்றையும் பார்த்து பார்த்து வாங்கினாலும் எங்கோ ஓரிடத்தில் பிசகிவிடக்கூடும். ஆகவே, வீட்டை அலங்கரிக்க ஆரம்பிக்கும் முன்னர், நிகழக்கூடிய சில தவறுகளை கருத்தில் கொண்டு தவிர்த்துவிட்டால் அறை சிறப்பாக தோற்றமளிக்கும்.
சீரான உயரம்
அறைக்குள் இருக்கும் எல்லா பொருள்களும் ஒரே உயரமாக அல்லது சிறிதாகவோ பெரிதாகவோ ஒரே அளவில் அமைந்தால் அறைக்கு அழகிய தோற்றம் வரவே வராது. சிறிதும் பெரிதுமான பொருள்களாக அறைக்குள் வைக்க வேண்டும். வெவ்வேறு உயரம், பல்வேறு அளவுகளில் பொருள்கள் இருந்தால் அறையின் அழகே தனிதான்!
அடர்வண்ண அறைகலன்கள்:
அறை சிறிதாக இருக்கும்பட்சத்தில் அதற்குள் பெரிய ஃபர்னிச்சர் பொருள்களை (அறைகலன்கள்) வாங்கி அடுக்கக்கூடாது. அதுவும் அடர்வண்ண பொருள்கள் கூடவே கூடாது. இலகுவான, மிருதுவான மூலப்பொருளால் செய்யப்பட்ட, ஒளியை பிரதிபலிக்கக்கூடிய கண்களை உறுத்தாத மென்மையான நிறம் கொண்ட அறைக்கலன்கள், சிறிய அறைக்கும் அழகிய தோற்றத்தை அளிக்கும்.
தரைவிரிப்பு:
அறைகளுக்கான தரைவிரிப்புகளை வாங்குவதில் பலர் தவறிழைத்துவிடுவர். சிறிய அளவிலான கம்பளங்கள் அறைக்கு மரியாதைக்குரிய தோற்றத்தை தராது. வருபவர்கள் அமரக்கூடிய ஹால் அல்லது பெரிய அறையில் குறைந்தது இரண்டு நாற்காலிகளின் நீளம் கொண்ட தரைவிரிப்புகள் திருப்தியான தோற்றத்தை அளிக்கும். சிறிய விரிப்புகளை படுக்கையறைகளில் பயன்படுத்தலாம்.
உயரே தொங்கும் ஓவியம்:
அலைந்து திரிந்து, கடைகளை அலசி பார்த்து, இணையத்தில் தேடி அழகிய ஓவியங்களை வாங்கிவிடலாம். அது பாதி கிணறுதாண்டியது போன்றதுதான். அந்த ஓவியங்களை அறைக்குள் எங்கே தொங்க விடுகிறீர்கள் என்பது முக்கியம்! ஓவியங்களை தவறான இடத்தில் அல்லது அதிக உயரத்தில் மாட்டிவிட்டால் அறையின் தோற்றம் கெட்டுவிடும். கூடுமானவரைக்கும் கண்பார்வை மட்டத்தில் அல்லது சற்று கீழாக ஆரம்பித்து தொங்க விடலாம்.
விளம்பர பொருள்கள்:
பிரபலமான இதழ்களின் அட்டையில் விளம்பரம் வந்துவிட்டதென்று எதையும் வாங்கிவிடக்கூடாது. நம் வீட்டுக்கு எது தேவை என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே வாங்கவேண்டும். அதே சமயம், புதிய பாணிகளை கவனிக்க தவறவே கூடாது. உங்கள் மனவிருப்பத்தின்படி மட்டுமே பொருள்களை வாங்குங்கள். அறை உங்களை மகிழ்விக்கும் இடமாக மாறும்.
வெளிச்சம்:
அறைக்கு வெளிச்சம் தேவைதான். ஆனால் கண் கூசும் அளவுக்குத் தேவையில்லை. அதிக சக்தி வாய்ந்த மின்விளக்குகளை மாட்டுவதற்குப் பதிலாக, பல்வேறு அடுக்குகளிலிருந்து வெளிச்சம் வருவதுபோன்று விளக்குகளை அமைக்கலாம். அது கண்களுக்கு இதமாக இருக்கும்.
சுவற்றை ஒட்டி...
ஃபர்னிச்சர்களை சுவற்றை ஒட்டிப்போட்டுவிடுவதுதான் அறை விஷயத்தில் அநேகர் செய்யும் தவறு. அது ஏதோ துண்டு துண்டாக கிடப்பது போன்ற தோற்றத்தை அறைக்குக் கொடுக்கும். அறையின் தோற்றத்தை தூக்கிக் காட்டும் வண்ணம் அறைகலன்களை வெவ்வேறு இடங்களில் பொருத்தமாக போட வேண்டும்.
இந்த விஷயங்களை தவறு செய்யாமல் இருந்தால், உங்கள் அறை மனதுக்கு நிறைவாக இருக்கும்.