திமுகவில் சேருகிறாரா தங்கத்தமிழ்ச்செல்வன்?

Is Thankatamilchelvan joining Dmk, speculations are spread over political circles

by எஸ். எம். கணபதி, Jun 27, 2019, 19:27 PM IST

அ.தி.மு.க.வில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தங்கத் தமிழ்ச்செல்வன், தி.மு.க.வில் சேரவிருக்கிறார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் சென்னைக்கு படையெடுத்துள்ளனர். அவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க. உடைந்தது. ஒரு அணிக்கு தலைமை தாங்கிய சசிகலா சிறைக்கு சென்றார். அதைத் தொடர்ந்து, அவரால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார். டி.டி.வி.தினகரன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். ஆனால், அதற்கு பிறகு நடந்த நாடகங்களில், பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்டி விட்டு, எடப்பாடி அணியினரும், ஓ.பி.எஸ். அணியினரும் இணைந்தனர். இதற்கு பிரதமர் மோடியே ஆதரவாக இருந்ததால், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. ஆனாலும், 18 எம்.எல்.ஏ.க்கள் வெளியே வந்து தினகரனுக்கு ஆதரவாக நின்றனர். முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டுமென்று ஆளுநரிடம் மனு கொடுத்த அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.

இதற்கு பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. எம்.எல்.ஏ. பதவியை இழந்த தங்கத் தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் தினகரனின் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டனர். தங்கத்தமிழ் செல்வன், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார்.

தோல்விக்குப் பின் விரக்தியடைந்த தங்கத்தமிழ்ச் செல்வன், ஹலோ எப்.எம். ரேடியோவில் ஒரு பேட்டி அளித்தார். அதில், எடப்பாடிக்கு ஆதரவாகவும், தினகரனுக்கு எதிராகவும் பேட்டியளித்தார். ‘அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளைத்தான் மக்கள் ஏற்று கொண்டிருக்கிறார்கள். அ.ம.மு.க.வை மக்கள் ஏற்கவில்லை’ என்றார்.

இந்நிலையில், அவர் அ.தி.மு.க.வுக்கு வர வேண்டுமென்று அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் வெளிப்படையாக பேசினர். இந்நிலையில், மதுரையில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு தோற்ற வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மற்றும் மகேந்திரனை தேனிக்கு அனுப்பி, மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருமாறு தினகரன் அனுப்பினார். அவர்கள் இருவரும் தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு தெரியாமலேயே வந்து நிர்வாகிகளிடம், தங்கத்தமிழ்ச் செல்வனுடன் அ.தி.மு.க.வுக்கோ, தி.மு.க.வுக்கோ போகப் ேபாகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், நிர்வாகிகள் பலரும் தங்கத் தமிழ்ச்செல்வனுடன் போக விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, நிர்வாகிகளை சென்னைக்கு வந்து தினகரனை சந்திக்குமாறு கூறி விட்டு, டேவிட் அண்ணாதுரையும், மகேந்திரனும் சென்றனர்.
இதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகி ஒருவரிடம் போனில் பேசிய தங்கத்தமிழ்ச் செல்வன், தினகரனை ஆபாசமாக விமர்சித்தார். ‘‘நான் விஸ்வரூபம் எடுத்தால், தினகரன் அழிந்து போய் விடுவார்’’ என்றெல்லாம் பேசினார்.

இந்நிலையில், சசிகலா குடும்பத்தினரைத் தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்த்து கொள்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஆனால், தங்கத்தமிழ்ச் செல்வனை சேர்ப்பதற்கு ஓ.பி.எஸ். அணி எதிர்ப்பு தெரிவிப்பதாக கட்சிக்குள் பேச்சு எழுந்தது. இது பற்றி தங்கத்தமிழ்ச் செல்வனிடம் கேட்டதற்கு, ‘‘இது ஊடகங்கள் பரப்பும் தவறான செய்தி’’ என்றார். எனவே, அவர் அ.தி.மு.க.வுக்குத்தான் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரை கட்சியில் சேர்க்கக் கூடாது என்று ஓ.பி.எஸ். அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதே போல், அவரை கட்சியில் சேர்த்தால் அதை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்றெல்லாம் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இந்நிலையில், திடீர் திருப்பமாக தங்கத்தமிழ்ச்செல்வன், தி.மு.க.வில் சேரவிருக்கிறார். தேனி மாவட்டத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் சென்னைக்கு படையெடுத்து வருகிறார்கள். அனேகமாக, தங்கத்தமிழ்ச்செல்வன் நாளை(ஜூன் 28ம் தேதி) தி.மு.க.வில் இணைகிறார் என்று செய்திகள் வெளியாயின. இதை தங்கத்தமிழ்ச்செல்வன் மறுக்கவில்லை.

ஆனாலும் கூட தங்கத்தமிழ்ச்செல்வனே இப்படியொரு தகவலை பரப்பி விட்டு, அ.தி.மு.க.வில் சேர்ந்தாலும் சேரலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

You'r reading திமுகவில் சேருகிறாரா தங்கத்தமிழ்ச்செல்வன்? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை