'புறம் பேசுதல்' இல்லாத இடங்களே இல்லை எனலாம். பலர் பணிபுரியும் இடங்களில் நிச்சயமாகவே இதற்கு இடமுண்டு. முதுகு பின்னால் பேசும் இப்பழக்கம் மோசமானது மட்டுமல்ல; இலக்காவோருக்கு தீமை விளைவிப்பதும்கூட. உங்களைப் பற்றி புறம் பேசப்பட்டால் அதை கையாள சில வழிமுறைகள்:
தைரியமாக இருப்பதாக காட்டிக்கொள்ளுங்கள்:
பொதுவாக கொஞ்சம் பலவீனமானவர்களையே புறம்பேசுவோர் குறி வைப்பர். அவர்கள் எதிர்பார்த்த எதிர்விளைவு நம்மிடம் இருந்தால் மகிழ்ச்சியடைவார்கள். ஆகவே, புறம்பேசப்படுவது காதுக்கு வந்தால் எந்த எதிர்வினையும் ஆற்ற வேண்டாம். மாறாக தைரியமாக இருங்கள். முதுகுக்கு பின்னால் பேசப்படும் காரியங்களால் மனமுடைந்தாலும் அதை வெளிக்காட்டாதீர்கள். உறுதியாக இருப்பதாக உணரச் செய்வது முக்கியம்.
ஒன்றுக்கு இருமுறை யோசியுங்கள்:
மிகவும் மனம் வேதனையடைந்து, 'நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டுடணும்' என்ற வேகம் எழக்கூடும். கொஞ்சம் நிதானியுங்கள். முதலில் பேச்சை ஆரம்பித்தவரிடம் கேட்டாலும், 'நான் எங்கே பேசினேன்... அப்படி பேசவேயில்லை' என்று சாதிப்பார். வதந்திகளுக்கு ஆதாரம் திரட்டுவது முடியாத ஒன்று. நேரம் வீணாகும். மன நிம்மதி கெட்டுப்போகும்.
முள்ளை முள்ளால் எடுங்கள்:
உங்களை வருத்தமடைய வைப்பதே புறங்கூறுகிறவர்களின் நோக்கம். வருத்தமேபடவில்லை என்று காட்டுவதே உங்கள் திறமை. நீங்கள் இரண்டுபேரிடம், "என்னைப் பற்றி இப்படி பேச்சு ஓடுதுன்னு கேள்விப்படுறேன். சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு" என்று சொல்லிவிடலாம். தங்கள் அஸ்திரங்கள் உங்களை அசைக்கவில்லை என்று தெரியும்போது புறம்பேசுபவர் கொஞ்சம் பின்னடைவார்.
தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்கவேண்டாம்:
உங்களைப்பற்றி எந்த தகவலும் உடன்பணியாளர்களுக்குத் தெரியவில்லை என்றால் பேசுவதற்கு பொய்யை தவிர வேறு ஒன்றும் இருக்காது. தனி வாழ்க்கை தகவல் அலுவலகத்திற்கு வேண்டாத ஒன்று. அதை நீங்கள் பகிர்ந்து கொள்பவர் எப்படி பயன்படுத்துவார் என்பதை கூற இயலாது. சொந்த வாழ்க்கை பற்றி கூறி, புறம்பேசுபவர்களுக்கு தீனி போடாதீர்கள்.
வேலை இரகசியத்தைக் காத்திடுங்கள்:
நிர்வாகம் உங்களை செய்ய பணித்திடும் பணியின் விவரங்களை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. கூடிய மட்டும் மற்றவர்களின் தலையீடு தேவைப்படாமல் முடிப்பது நல்லது. மற்றவர்கள் உள்ளே புக இடங்கொடுத்தால் வேலை விவரங்களை அறிந்து கொண்டு பேசத் தொடங்குவார்கள். குழுவாக செய்யவேண்டிய வேலை என்றால் குழு உறுப்பினர்களிடம் மட்டுமே பேசுங்கள்.
கவனத்தை சிதற விடாதீர்கள்:
புறம் பேசுதல் சில்லறை விஷயம். அதைப் பற்றி யோசித்து வேலையை சொதப்பி விடக்கூடாது. நிர்வாகம் நமக்கு ஊதியம் தருவது வேலையை செவ்வனே முடிப்பதற்கு தான். அந்தக் கடமையிலிருந்து தவறி விடக்கூடாது. ஆகவே, முதலில் வேலைக்கே முக்கியத்துவம் கொடுங்கள்.