புகை பிடிப்பதை காட்டிலும் உடல் பருமனே புற்றுநோய் வருவதற்கு அதிகம் காரணமாவதாக பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை கொண்டுவரும் அபாயம் இருப்பதால் குழந்தைகள் பார்க்காத பின்னிரவு பொழுதில் மட்டும் நொறுக்குத் தீனிகளுக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பிரிட்டன் ஆய்வு
பிரிட்டனில் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தால் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. புற்றுநோய்க்கு அதிகபட்ச காரணமாக புகைத்தலே இருக்கிறது. புகைப்பது தவிர்க்கக்கூடிய பழக்கம் என்று கூறும் அந்த ஆய்வு பிரிட்டனில் மூன்றில் ஒரு பெரியவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கொழுப்பு உடல் செல்களை வேகமாக பிரிதல் வினைக்கு தூண்டுவதால் புற்றுநோய்க்கு காரணமாவதாகவும் கூறுகிறது.
எகிறும் எண்ணிக்கை
அதிக உடல் எடையால் புற்றுநோய்க்கு ஆளாவோரின் எண்ணிக்கை புகையால் வருவதைக் காட்டிலும் அதிகம் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் ஓர் ஆண்டில் புகையால் பாதிக்கப்படுவோரை காட்டிலும் 1,900 பேர் அதிகமாக கூடுதல் உடல் எடையால் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகின்றனர். சிறுநீரக புற்றுநோயால் 1,400 பேர் அதிகமாகவும், 460 பேர் சினைப்பை புற்றுநோயால் அதிக எண்ணிக்கையிலும், ஈரலில் புற்றுநோயால் 180 பேர் அதிக எண்ணிக்கையிலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
குறையும் புகைப்பழக்கம்
எதிர்கால சந்ததியில் புகைப்போர் குறைவாகவே இருப்பர். ஆனால், அதிக உடல் எடையால் 13 வகை புற்றுநோய்கள் வரக்கூடும் என்று கூறியுள்ள பிரிட்டன் நிறுவனம், உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானித்துள்ளது.
ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மட்டுமல்ல, ஆரோக்கியமான உணவும் நோயற்ற வாழ்வுக்கு அவசியம். உணவு பற்றிய சரியான உண்மைகளை குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டியது இன்றியமையாத கடமையாகும்.