"வீட்லயிருந்து ஆபீஸ். ஆபீஸ்ல இருந்து வீடு - தினசரி இதுக்குதான் நேரம் இருக்கு... என்ன வாழ்க்கையோ சாமி," இப்படித்தான் எல்லோருக்கும் அலுத்துக்கொள்ளுகிறோம் அல்லவா!
"எனக்கு சொந்தக்காரன் ஒருத்தன்கூட இல்ல," என்று வடிவேலு மாதிரி எல்லோரும் கூற இயலாது. அனைவருக்குமே உறவு, நட்பு என்று ஒரு வட்டம் கண்டிப்பாக இருக்கும். குடும்பத்துடன் செலவிடவே நேரம் இல்லையென்றால், உறவினர் குடும்பங்களின் நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ள நேரம் ஏது?
மனிதனுக்கு சமுதாய பங்களிப்பும் முக்கியம். சரி, பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் நமக்கென்று சிறிது நேரத்தை ஒதுக்கிக் கொள்வது எப்படி?
கடினமான வேலைக்கு முன்னுரிமை:
பழக்கமான வேலையை அனிச்சையாக செய்துகொண்டே இருப்போம். ஆனால், எல்லோருக்கும் வேலையில் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதி கடினமானதாக அல்லது செய்வதற்கு ஈடுபாடு இல்லாததாக இருக்கும். ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ரசீது, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் ஆர்டர்கள், குறிப்பிட்ட வேலைக்கான சாமான் பட்டியல், குறிப்பிட்ட கிளை அலுவலகத்தின் வரவு, செலவு என்று ஏதாவது ஒன்று கொஞ்சம் கசப்பாக இருக்கும்.
நாம் செய்ய வேண்டியது, முதலில் அப்படிப்பட்ட வேலையை முடிப்பதுதான். கடினமான வேலையைதான் முதலில் செய்யவேண்டுமென்று மனதை ஆயத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். காலையில் புத்துணர்வாக இருக்கும்போது கடினமான வேலையை செய்வது சற்று எளிதாக தோன்றும். வேலையின் கடினமாக பகுதி முடிந்துவிட்டால், மற்ற பகுதிகளை எளிதாக, ஈடுபாட்டுடன் செய்துவிட இயலும். நேரங்கழித்து அலுவலகத்தில் அமர்ந்திருப்பதை இது தவிர்க்கும்.
பட்டியல் படுத்துங்கள்:
கடினமான வேலையை முதலில் குறிப்பிட்டு பின்னர் வரிசையாக எவை எவற்றை முடிக்கவேண்டும் என்று ஒரு பட்டியலை ஆயத்தப்படுத்துங்கள். இந்த முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் வேலைகளை முடித்தால், நேரம் மிச்சமாகும்;மனமும் இலகுவாகும்.
முன்பே முடியுங்கள்:
வேலையை முணுமுணுத்துக் கொண்டே தூக்கிச் சுமப்பதற்குப் பதிலாக, எளிதாக செய்வதற்கான வழியினை வகுத்துவிட்டோம். கடினமான வேலையை முதலில் முடித்து, பிறகு தயார் செய்ய பட்டியல்படி வேலைகளை முடித்து வந்தால், நாளடைவில் அலுவலக நேரம் மீதியாக இருக்கும். அதில் மறுநாள் செய்யவேண்டிய வேலை ஏதும் இருந்தால் அவற்றை செய்து வைக்கலம். மறுநாள் வரும்போது வேலை சற்று எளிதாக இருக்கும். ஒருபோதும், இன்றைக்கான பட்டியலில் உள்ள வேலையை மறுநாளைக்குத் தள்ளி வைக்காதீர்கள். இன்று நம்முடைய நாள்; நாளை நம் கரங்களில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தேவைக்கு மட்டும் போன்:
எட்டுக்குள்ள உலகம் இருக்குதோ இல்லையோ கண்டிப்பாக ஸ்மார்ட்போனுக்குள் இருக்குது. உங்கள் ஸ்மார்ட்போனில் தேவையான செயலிகளை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். அத்தியாவசியம் அல்லாதவற்றை நீக்கிவிடவும். இது அலுவலக நேரம் போனில் வீணாகாமல் தடுக்க உதவும்.
எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள்:
'இதற்கு இவ்வளவு நேரம்', 'இவருக்கு இவ்வளவு நேரம்' என்று கூடுமானவரை வகுத்துக்கொள்வது நல்லது. இவற்றை கண்டிப்பாக கடைபிடிக்காவிட்டாலும் ஓரளவுக்காவது பின்பற்றலாம். எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கவேண்டும் என்பது இதன் பொருளல்ல; மேலதிகாரி கூறுவதை தவிர்ப்பது என்பதும் அர்த்தமல்ல. அலுவலகத்திற்கு அதிகம்; தனி வாழ்க்கைக்கு கொஞ்சம் என்ற விகிதத்திலாவது உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப வேலைகளுக்கு, இளைப்பாறுதலுக்கு நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
இவற்றை சிறிது காலம் பின்பற்றி வந்தால், மனம் இலகுவாக இருப்பதை உணர முடியும்.