டெல்லி மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த ஷீலா தீட்சித் இன்று காலமானார். அவருடைய உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் 1998 முதல் 2013 வரை டெல்லியின் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், உடல் நலக் குறைவு காரணமாக, டெல்லியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று மாலை 3:30 மணி அளவில் காலமானார்.
தற்போது டெல்லி மாநில காங்கிரஸின் தலைவராக இருந்து வந்த ஷீலா தீட்சித், 1998 முதல் 2003 வரை, தொடர்ந்து 3 முறை டெல்லியின் முதல்வராக பதவி வகித்தார்.
2014 -ம் ஆண்டு அவர் கேரள மாநில ஆளுநராக 6 மாத காலம் பதவி வகித்தார்.
ஷீலா தீட்சித் மறைவை அடுத்து காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,ஷீலா தீட்சித் இறப்பு குறித்து வரும் செய்தியால் நாங்கள் வருத்தமடைகிறோம். அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் ஸ்திரமாக இருப்பார்கள் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஷீலா தீட்சித் டெல்லியின் முதல்வராக இருந்தபோது, தலைநகரம் நல்ல வளர்ச்சியைப் பெற்றது. அதற்காக அவர் என்றும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தாருக்கும் சார்ந்தோருக்கும் இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மிகவும் கரிசனமான மனம் கொண்டவர் ஷீலா தீட்சித். டெல்லியின் முன்னேற்றத்துக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு அவர் உழைத்துள்ளார். அவரது குடும்பத்தாருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷீலா தீட்சித் மறைவு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் அன்பு மகளாக திகழ்ந்த ஷீலா தீட்சித்தின் மறைவு பற்றிய செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஷீலா தீட்சித்தின் உடல் டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.