மழைக்காலம்! ஆனந்த அனுபவங்கள் நிறைந்தது. சூடாக பக்கோடா, சமோசா என்று எதையாவது கடித்துக்கொண்டு டீயோ, காஃபியோ குடிப்பது அனைவருக்குமே விருப்பமானது.
மழைக்காலம், சளி போன்ற தொல்லைகள் வரக்கூடிய காலமாகும். சில உணவுகளை தவிர்த்தால், உடல் ஆரோக்கியம் கெடாமல் எச்சரிக்கையாக இருக்கலாம்.
வெட்டி வைக்கப்பட்ட பழங்கள்:
பழங்கள் சத்துமிக்கவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சாலையோர வியாபாரிகள் துண்டு துண்டாக பழங்களை வெட்டி வைத்து விற்பதை காணலாம். பழம் சாப்பிடுவதற்கு ஒரு வாய்ப்பாக கருதி பலர் அதை சாப்பிடுவார்கள். மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் இருக்கும்.
ஆகவே, நோய்க்கிருமிகள் பரவுவதற்கு ஏற்ற சூழல் நிலவும். சளி போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் இருமினால் கிருமிகள் காற்றில் பரவி இதுபோன்ற திறந்த உணவுப்பொருள்களில் தங்குவதற்கு வாய்ப்பு அதிகம். ஆகவே, வெட்டப்பட்டு நெடுநேரம் கடந்த பழங்களை உண்பதை தவிர்த்தல் நலம். வெளியில் மட்டுமல்ல, வீட்டிலும் ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்டிருக்கும் பழத்துண்டுகளை சாப்பிட வேண்டாம்.
பொறித்த உணவு பொருள்கள்:
வெளியே மழை பெய்யும்போது நன்றாக பொறித்த பொருள்களை சாப்பிடுவதில் அலாதி இன்பம் கிடைக்கும். ஆனால், மழைக்காலத்தில் காணப்படும் ஈரப்பதத்தால் நம் செரிமான மண்டலத்தில் பணி சற்று மெதுவாகவே நடக்கும். ஆகவே, பொறித்த உணவுகளை சாப்பிடுவது வயிற்று உப்பிசம் போன்ற உடல்நல கோளாறுகளுக்குக் காரணமாக அமைய வாய்ப்புள்ளது.
கடல் உணவு:
மழைக்காலத்தில் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய உணவு பட்டியலில் மீன் போன்ற கடல்வாழ் உயிர்களுக்கு கண்டிப்பாக இடம் உண்டு. பொதுவாக பருவமழைக்காலம் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு இனப்பெருக்க காலமாக அமைய வாய்ப்புண்டு. மீன்களின் உடலில் முட்டைகள் இருக்கக்கூடும். அந்த நேரத்தில் அவற்றை சாப்பிட்டால் சாதாரண வயிற்றுப் பிரச்னை முதல் தீவிரமான உணவு ஒவ்வாமை பாதிப்புகளும் நேரக்கூடும்.
கீரை வகை:
கீரை உடம்புக்கு ஆகாது என்று யாராவது கூறுவார்களா? கீரைகள், பச்சை காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை பயப்பவை. மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் இருப்பதால், மொத்தமாக குவித்து வைக்கப்படும் இலை தழை வகை கீரைகளில் நோய்க்கிருமிகள் தங்கி பெருகக்கூடும். ஆகவே, முட்டைகோஸ், காலிஃபிளவர் உள்ளிட்ட இலை தழை மற்றும் கீரை வகைகளை தவிர்க்கவும்.
காளான்:
காளான்கள் நெருக்கமான சூழலில் வளரக்கூடியவை. சாப்பிடுவதற்கு முன்பு அவற்றை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். மழைக்காலங்களில் காளான்களில் தீங்கு தரும் நுண்ணுயிரிகள் இருக்கக்கூடும். ஆகவே, பருவமழைக்காலங்களில் காளான்களை உண்பதை தவிர்ப்பது நல்லது.