ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் இ-சிகரெட் இந்தியாவில் அறிமுகமானது. தற்போது அது இளைஞர் மத்தியில் பரவலாக புழக்கத்தில் உள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் நச்சு இ-சிகரெட்டில் இல்லை என்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.
தடை பொருந்தாதா?
2014ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் இ-சிகரெட்டை அந்நிறுவனம், 'எங்கும் எப்போதும் புகைக்கும் இன்பம்' என்று கூறி விளம்பரப்படுத்தியது. புகை பிடித்தல் தடை செய்யப்பட்ட பொது இடங்களில் கூட இ-சிகரெட்டை புகைக்கலாம் என்று அவ்விளம்பரத்தில் கூறப்பட்டது.
புகையிலை பொருள்கள் விற்கும் நிறுவனங்களில் பல, இ-சிகரெட்டுகளை 'குறைந்த ஆபத்து' கொண்டவை என்று கூறியே விற்பனை செய்து வருகின்றன. புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் விட்டுவிடுவதற்கு மாற்று என்று கூறியே 'புகையிலையை வெளிடும் மின்னணு சாதனங்கள்' (Electronic Nicotine Delivery Systems (ENDS) விற்கப்படுகின்றன.
இரட்டை விலங்கு
புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவதற்காக என்று இ-சிகரெட்டுக்கு பழகும் சிலர், பின்னர் சிகரெட், இ-சிகரெட் இரண்டையும் பயன்படுத்தத் தொடங்கி விடுகின்றனர். சட்டிக்கு தப்பி அடுப்புக்குள் விழுந்தது போன்று சிகரெட் புகைப்பதை விடுகிறேன் என்று இ-சிகரெட்டுக்கும் சேர்த்தே இளைஞர்கள் அடிமையாகிவிடுகின்றனர். இரட்டை விலங்கிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இளைஞர்களை புதிதாக புகை பழக்கத்திற்கு அடிமையாக்கவும், புகை பழக்கத்தை விட்டு விட தீர்மானிக்கும் பெரியவர்களை தொடர்ந்து தக்க வைக்கவுமே புகையிலை பொருள் நிறுவனங்கள், இ-சிகரெட்டை விளம்பரம் செய்கின்றன. புகை பிடித்தலின் ஆபத்து இல்லை என்று கூறி இ-சிகரெட்டை விற்கும் நிறுவனங்களின் செயல்பாட்டில், மக்களின் நலம் பற்றிய நல்லெண்ணம் அல்ல; புகையிலையை தொடர்ந்து விற்கும் வியாபார தந்திரமே மறைந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்
பொது சுகாதாரம் பேணப்படுவதற்காக புகையிலையை வெளிடும் மின்னணு சாதனங்கள் (ENDS) மற்றும் இ-சிகரெட் ஆகியவற்றை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்று இந்திய மருத்து ஆராய்ச்சி கழகம் (ICMR) பரிந்துரைத்துள்ளது.
இ-சிகரெட் மற்றும் நிக்கோட்டின் சுவையுள்ள இ-ஹூக்காக்கள் தயாரிப்பு, விநியோகம், விளம்பரம் மற்றும் விற்பனை செய்யப்படாததை மாநில அரசுகள் கண்காணிக்கவேண்டும் மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஆண்டு கேட்டுக்கொண்டிருந்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் மிசோராம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் இ-சிகரெட்டை தடை செய்துள்ளன.
தவறான நம்பிக்கை
இ-சிகரெட் புகைப்போருக்கு சிகரெட் புகைத்தலின் தீமை வராது என்பதும், புகையிலை பயன்படுத்தல் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் இ-சிகரெட்டுக்கு பொருந்தாது என்பதும் தவறான நம்பிக்கைகளாகும்.
இ-சிகரெட் புகைப்போருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய் வரும். சிகரெட்டை விடுவதாக இ-சிகரெட்டை பழகி, தற்போது இரண்டையும் தொடர்ந்து புகைப்போருக்கு மாரடைப்பு வரும் அபாயம் உள்ளது.
சிறுவர்களுக்கு புகையிலை பொருள்கள் விற்கப்படக்கூடாது என்ற உலக சுகாதார நிறுவனத்தின் நெறிமுறைகளை இ-சிகரெட் நிறுவனங்கள் மீறுகின்றன.
பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைக்கும் இ-சிகரெட், உடல் உள்ளுறுப்புகளை பாதிப்பதோடு, காயம் ஏற்படுத்துதல், உயிரிழப்பு, பொருள் சேதம் ஆகியவற்றும் காரணமாகலாம். நெருப்பில்லாமல் வெப்பம் தரும் கருவிகளாக இருந்தாலும் அவை ஆபத்தையே தருகின்றன. ஆகவே, எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.