நெல்லை மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமைக்குரிய முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியையும், அவருடைய கணவர் மற்றும் வீட்டு வேலைக்காரப் பெண் ஆகிய 3 பேரையும் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின்னர், 1996-ல் முதல் முறையாக நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர் உமா மகேஸ்வரி. இவருடைய வீடு நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ளது. உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன், பொறியாளராக நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர்களின் மகன், கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். மகள் கார்த்திகா, நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.
இன்று மாலை உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு வேலைக்காரப் பெண் மாரி ஆகியோர் வீட்டில் இருந்தபோது, பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் ஒன்று 3 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. அதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் மூவரின் தலைகளில் தாக்கியுள்ளனர் கொலையாளிகள். மேலும், மூவரையும் தனித்தனி ரூமில் வைத்து கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொடூர கொலைச் சம்பவத்துக்குக் காரணம் யார்? என்பது உடனடியாகத் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்ததா? அல்லது சொத்துத் தகராறு காரணமாக இந்தப் படுகொலை நடந்ததா என்பது பற்றி மேலப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
பட்டப்பகலில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வேலைக்காரப் பெண் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.