தாமதமாக வரும் ரயிலுக்கு காத்திருக்கும்போது இனி, "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி" என்று பாடவேண்டிய அவசியம் இருக்காது. ஆம், ரயில் நிலையங்கள் மற்றும் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களில் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், செய்திகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கட்டணமின்றி பார்க்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.
"பயணிகள் இதை நிச்சயம் விரும்புவர்! உங்களுக்கு விருப்பமான திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் இசைக்கோவையை ரயில்களிலும் நிலையங்களிலும் விரைவில் சாதனங்கள் மூலம் காணலாம்" என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
ரயில்டெல் சேவையின் மூலம் பலமொழிகளைச் சார்ந்த முன்பே பதிவேற்றப்பட்ட திரைப்படங்கள், இசை வீடியோக்கள், தொலைக்காட்சி தொடர் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், ஆன்மீகம் மற்றும் வாழ்வியல் நிகழ்ச்சிகள் பகிரப்பட உள்ளன. மொபைல் போன் மற்றும் டேப்லெட் என்னும் கையடக்க கணினி மூலம் இவற்றை பார்க்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றப்படும் என்றும் தெரிகிறது. இடையறாது இவ்வசதியை பயணியர் பெறுவதற்காக ரயில்கள் சர்வர்கள் அமைக்கப்படலாம்.
பயணியர் கட்டணமின்றி பார்க்கக்கூடிய வீடியோக்களில் விளம்பரங்கள் காட்டப்படக்கூடும் என்று நம்பப்படுகிறது. இது எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த திட்டமான தகவல் இல்லை. எப்படியோ ரயில் பயணங்கள் இனிமையான அனுபவங்களை தரும் என்பது நிச்சயம்!