தற்கொலை செய்ய முடியாத சீலிங் ஃபேன்: காப்புரிமை பெற்ற மருத்துவர்

by SAM ASIR, Aug 7, 2019, 17:09 PM IST

தற்கொலை செய்வதற்கு மேற்கூரையில் தொங்கும் மின்விசிறிகளை பலர் பயன்படுத்தி விடுகின்றனர். வெளியே செல்லாமல், வீட்டுக்குள் அல்லது தங்கும் விடுதியில் இருக்கும் சீலிங் ஃபேன்களில் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் இதயவியல் மருத்துவர் ஆர்.எஸ். சர்மா. அவரது அண்டை வீட்டில் வசித்து வந்த குடும்பத்தை சேர்ந்த பையன் 12ம் வகுப்பு படித்து வந்தான். தேர்வில் தோல்வியடைந்ததால் வீட்டின் கூரையில் தொங்கிய மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

அவனது தந்தையை யாராலும் ஆறுதல்படுத்த இயலவில்லை. "டேபிள் ஃபேனை மாற்றி சீலிங் ஃபேன் மாட்டாமல் இருந்திருந்தால் என் பையனை இழந்திருக்கமாட்டேனே," என்று இறந்த பையனின் தந்தை டாக்டர் சர்மாவிடம் அழுது புலம்பியுள்ளார்.

இந்த சம்பவம் டாக்டர் சர்மாவை உறங்கவிடாமல் செய்தது. தற்கொலை செய்து கொள்ள முடியாதபடி சீலிங் ஃபேனை வடிவமைக்கமுடியுமா என்று அவர் சிந்தித்தார். ஒரு வாரம் கடுமையாக யோசித்து தொழிலாளர்களின் உதவியோடு ஒரு சீலிங் ஃபேனை வடிவமைத்தார் டாக்டர் சர்மா.

மின் விசிறியை மேற்கூரையுடன் இணைக்கும் அச்சினுள் உலோக குழாய் ஒன்றை சர்மா வைத்துள்ளார். அந்த உலோக குழாயில் மின் விசிறிக்கான மோட்டாரும் இறக்கைகளும் இணைக்கப்பட்டிருக்கும். மின் விசிறியின் முக்கிய அச்சுடன் நான்கு உறுதியான சுருள்வில்கள் (ஸ்பிரிங்) பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஸ்பிரிங், விசிறியுடன் கூடுதலாக 25 கிலோ எடையை தாங்கக்கூடியதாக இருக்கும். மின் விசிறியின் எடை 25 கிலோவுக்கும் அதிகமாகும்போது, சுருள்வில்கள் (ஸ்பிரிங்) நீண்டு, கழுத்து பாதிக்கப்படாமல், கயிற்றின் சுருக்கு இறுகாமல் தொங்குபவர் தரையில் இறக்கப்படுவார்.

இந்த மின் விசிறியை டாக்டர் சர்மா, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தார். ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி, இதற்கு இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் காப்புரிமை வழங்கியுள்ளது.

ஸ்பிரிங்க் நீளும்போது அக்கம்பக்கத்திலுள்ளவர்களை எச்சரிக்கும் வண்ணம் சைரன் ஒலிக்கும்படியும் இதை சர்மா மேம்படுத்தியுள்ளார். இதுபோன்ற விசிறியில் தற்கொலை முயற்சி நடந்தால் உரிய நபர்களின் மொபைல் எண்களுக்கு செய்தி போகும்படியும் முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏற்பாடுகளை செய்ய ரூ.500/- மட்டுமே செலவாகும் என்றும் வர்த்தக ரீதியாக தயாரித்தால் இதைக்காட்டிலும் குறைவாகவே செலவாகும் என்றும் டாக்டர் ஆர்.எஸ். சர்மா கூறியுள்ளார்.

READ MORE ABOUT :

Leave a reply