உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாதுங்க!

by SAM ASIR, Aug 7, 2019, 18:44 PM IST
Share Tweet Whatsapp

'தன்னம்பிக்கை வேண்டும்' என்ற அறிவுரை அடிக்கடி கூறப்படுகிறது. தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பல வகுப்புகள் கூட நடத்தப்படுகின்றன.

தோல்வியை சந்திக்கும்போது, மற்றவர்கள் நம்மை எதிர்மறை விமர்சிக்கும்போது உண்மையில் நாம் தன்னம்பிக்கையை இழந்துபோகிறோம். நம்மேல் நமக்கு நம்பிக்கை இல்லாதபோது, எந்த செயலிலும் உத்வேகத்துடன் ஈடுபட இயலாது. ஆகவே, எக்காரணம் கொண்டும், எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழந்து போகக்கூடாது.
பிறக்கும்போதே யாரும் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையோடு பிறப்பதில்லை. 'எவ்வளவு தன்னம்பிக்கை!' என்று வியக்கும்வண்ணம் யாரையும் கண்டீர்களென்றால், அந்த நிலையை அவர்கள் பல்லாண்டு உழைத்தே எட்டியிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கனவில் உங்களை காணுங்கள்

வாழ்க்கையில் நீங்கள் எந்த நிலையை எட்டவேண்டும் அல்லது யாராக விளங்கவேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்த நிலையை அடைந்து விட்டதாக, அதாவது தொழிலதிபராக, அரசியல் தலைவராக, மருத்துவராக, அரசு உயர் அதிகாரியாக ஆகிவிட்டதாக நம்புங்கள். அதாவது அந்தக் குறிப்பிட்ட நிலையை அடைந்து விட்டது போன்ற பெருமிதம் உங்களுக்குள் வந்துவிடவேண்டும். மருத்துவராக, மற்றவர்களுக்கு சேவை செய்பவராக உங்களை நீங்களே எண்ணிக்கொள்ளும்போது, புதிய உற்சாகம் உங்களுக்குள் பிறக்கும்.

மீண்டும் மீண்டும் கூறுங்கள்

உங்களைப் பற்றிய நேர்மறையான எண்ணங்களை வாய்விட்டு அடிக்கடி கூறுங்கள். உங்களிடம் உள்ள குறைபாடுகளாக நீங்கள் காண்பவற்றை நேர்மறையாக மாற்றிப் பாருங்கள். உதாரணமாக, ஒருவர் தன் தோற்றத்தைக் குறித்து தாழ்வுணர்வோடு இருப்பாரானால், 'பாருய்யா... நான் எவ்வளவு கம்பீரமா இருக்கேன்!' என்று கண்ணாடி முன் நின்று கூறலாம். உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையானவையாக நீங்கள் கருதுபவற்றை அப்படியே நேர்மறையாக மாற்றி கூறுங்கள். அடிக்கடி வாய்விட்டு இப்படி கூறும்போது உங்கள் மனம் அப்படியே நம்ப ஆரம்பிக்கும். தன்னம்பிக்கை பிறக்கும்.

ஒரு கை பாருங்கள்

மேடையில் பேசுவதற்கு பயம்; புதியவர்களிடம் அறிமுகம் செய்து கொள்ள பயம்; மேலதிகாரியை சந்திப்பதற்கு பயம் -என்று ஏகப்பட்ட பயம் உங்களுக்குள் இருக்கலாம். பயத்தை போக்குவதற்கு நல்ல வழி எது தெரியுமா? நேரடியாக அதை சந்தித்து விடுவதுதான்!

மேலதிகாரியிடம் பேசுவதற்கு பயம் என்றால் தினமும் அவரை நேரில் சந்தித்து 'வணக்கம்' செலுத்தலாம். இதுபோன்று நீங்கள் பயப்படுகிற ஒவ்வொரு காரியத்தையும் நாளைக்கு ஒன்றாக செய்து பாருங்கள். பயம் விலகும்.

சுய விமர்சனம் செய்யுங்கள்

தன்னம்பிக்கை குறைவதற்கு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு அல்லது சரியில்லாத வகையில் கணித்து சுய விமர்சனம் செய்து விடுவதும் தன்னம்பிக்கை குறைவதற்கு ஒரு காரணமாகும்.

'நான் தோற்றுபோனேன் என்பதற்கு சரியான ஆதாரம் என்ன?' 'எதை வைத்து நான் இனி வெற்றி பெற முடியாது என்று தீர்மானிக்க முடியும்?' என்று உங்களுக்குள் கேள்வி எழுப்புங்கள். இது காரணமற்ற பயத்தை விலக்கி, தன்னம்பிக்கையோடு முயற்சிசெய்ய உதவும்.

மற்றவர்களுக்கு உதவுங்கள்

எப்போதும் எதிர்கொள்ள இருக்கும் காரியங்களை குறித்தே நினைத்துக்கொண்டிருக்காமல், சிறு சிறு உதவிகள் தேவைப்படுவோருக்கு உதவுங்கள். உங்கள் உதவியால், அது சிறு உதவியாக இருந்தால்கூட வேலை முடியும்போது 'ஓ... இது இப்படித்தானா!' என்று தன்னம்பிக்கை பெருகும். நீங்கள் உதவும் காரியம் வெற்றியாக முடியும்போது இயற்கையாகவே நம்பிக்கை கூடும்.


Leave a reply