காஷ்மீரில் முழு அமைதி சில இடங்களில் கல்வீச்சு

by எஸ். எம். கணபதி, Aug 7, 2019, 18:32 PM IST
Share Tweet Whatsapp

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2வது நாளாக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் முழு அமைதி நிலவுகிறது. எனினும், சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிரிவு 370ஐ ரத்து செய்தால் கடும் விளைவுகள் நேரிடும் என்று அந்த மாநில அரசியல் தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் கூறி வந்தனர். இதனால், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

ஜம்மு, காஷ்மீரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்தது. மேலும், அமர்நாத் யாத்திரையை நிறுத்தி, சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் காஷ்மீரை விட்டு வெளியேறச் செய்தனர். அதன்பின், முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோரை வீட்டுச் சிறையில் வைத்தனர். தொலைபேசி, செல்போன் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டன.

அனைத்து வகைகளிலும் மக்கள் நடமாட முடியாமல் செய்த பின்பு, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பிரிவு 370ஐ ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் யூனியன் பிரதேசங்களாக மாற்றும் சட்டத்தை நிறைவேற்றியது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் 2வது நாளாக எந்த அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறவில்லை. ஸ்ரீநகர் உள்பட முக்கிய நகரங்களில் 144 தடையுத்தரவு நீடித்து வருகிறது. மாநிலத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வெளியே நடமாடுவதை முழுமையாக குறைத்து விட்டனர். எனினும், ராம்பாக், நட்டிப்போரா, டவுன்டவுண், குல்காம், அனந்தநாக் ஆகிய இடங்களில் ராணுவப் படைகளை நோக்கி கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. எனினும், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சுமார் நூறு பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்ட மெகபூபா, உமர் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் 370ஐ ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேறியதை அடுத்து, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.


Leave a reply