சுகப்பிரசவத்திற்கு உதவும் பேரீச்சை பழம்

by SAM ASIR, Sep 7, 2020, 18:12 PM IST

பேரீச்சை மத்திய கிழக்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டது. தற்போது மத்திய தரைக் கடல் பகுதி, ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் மெக்ஸிகோ ஆகிய பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன.

சத்துகள்

பேரீச்சையில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), வைட்டமின்கள் கே, சி மற்றும் டி, மெக்னீசியம் ஆகியவை உள்ளன. இந்த சத்துகள் எலும்புக்கு ஆரோக்கியம் அளிக்கும். உடலில் நச்சுப்பொருள்களால் செல் மற்றும் திசுக்கள் சேதமடையாமல் காப்பாற்றும் செலினியமும் பேரீச்சையில் உள்ளது. இரத்த சிவப்பணு உற்பத்திக்குத் தேவையானதும், கர்ப்பிணிகளுக்கு அவசியமானதுமான ஃபோலேட் என்னும் வைட்டமின் பி சத்தும் பேரீச்சையில் உள்ளது.

ஓரளவுக்குத் தரமான உலர்ந்த பேரீச்சை பழங்கள் ஐந்தை எடுத்தால் அவை 100 கிராம் எடை இருக்கக்கூடும். அவற்றில் 235 கலோரி இருக்கும். கொழுப்பு கணக்கில் கொள்ளத்தக்க இயலாத அளவு மிகக்குறைவாகவும், புரதம் 2.4 கிராமும், கார்போஹைடிரேடு 58 கிராமும் இருக்கும். இந்த கார்போஹைடிரேடு, குளூக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் அடங்கியது. 4 கிராம் நார்ச்சத்து இருக்கும்.

குறைந்த ஜிஐ குறியீடு

ஒரு குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டதும் எவ்வளவு விரைவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுகிறது என்பதைப் பொறுத்து கிளைசெமிக் இன்டெக்ஸ் என்ற குறியீடு வழங்கப்படுகிறது. பேரீச்சையைச் சாப்பிட்டதும் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடாது. பேரீச்சையிலுள்ள நார்ச்சத்து விரைவாகச் சர்க்கரை இரத்தத்தில் கலப்பதைத் தடுக்கிறது.

மூளை

பேரீச்சை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இன்டர்லூகின் என்ற பொருள் மூளையின் அழற்சிக்குக் காரணமாகும். இது அதிகமானால் நரம்பியல் நோயான அல்சைமர் வரக்கூடும். பேரீச்சை இன்டர்லூகினின் அளவை குறைக்கிறது.மூளையில் படிவுகள் உண்டாக அமிலாய்டு பீட்டா புரதங்கள் காரணமாகின்றன. பேரீச்சை இந்த பீட்டா புரதங்களின் செயல்பாட்டைக் குறைக்கிறது. இந்தப் படிவுகள் மூளையில் தங்குமானால் மூளை செல்களுக்கிடையே தகவல்தொடர்பு குறைந்து அல்சைமர் போன்ற நினைவு குழப்ப வியாதிகள் தோன்றும்.

சுகப்பிரசவம்

பேரீச்சை சாப்பிடுவது சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது என்று கூறப்படுகிறது. பிரசவம் நடைபெறும் காலத்திற்கு சில வாரங்கள் முன்பிருந்து பேரீச்சை சாப்பிட்டு வந்தால் இடுப்பெலும்பு விரிவடையும் என்று கூறப்படுகிறது. அது பிரசவிக்கும் நேரத்தையும் குறைக்கிறது.ஆய்வு ஒன்றில், பிரசவத்திற்குக் குறிக்கப்பட்ட நாளுக்கு நான்கு வாரங்கள் முன்பிருந்து தினமும் ஆறு பேரீச்சை பழங்கள் கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கப்பட்டன. 69 கர்ப்பிணிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் 20 சதவீதம் பேருக்குச் சுகப்பிரசவமானது; பிரசவத்திற்கு ஆன நேரமும் குறைவாக இருந்தது. 154 கர்ப்பிணிகளிடையே செய்யப்பட்ட மற்றொரு ஆய்வில் பேரீச்சை சாப்பிட்டவர்களுக்குச் சுகப்பிரசவம் நடந்தது தெரிய வந்தது. கருவுற்று 37வது வாரத்தில் தினமும் 70 முதல் 76 கிராம் பேரீச்சை கொடுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு, அதைச் சாப்பிடாத கர்ப்பிணிகளைக் காட்டிலும் குறைவான நேரத்தில் குழந்தை பிறந்தது.

பக்கவாதம்

பேரீச்சையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. குறைந்த அளவு சோடியம் உள்ளது. நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் பண்பு பேரீச்சைக்கு உள்ளது. பேரீச்சையிலுள்ள பொட்டாசியம் கொலஸ்ட்ராலின் அளவை குறித்து பக்கவாதம் வரும் வாய்ப்பினை மட்டுப்படுத்துகிறது.

இரத்த சோகை

பேரீச்சையில் இரும்புச் சத்து அதிகம். இரும்புச் சத்து குறைவினால் அவதிப்படுவோருக்குப் பேரீச்சை ஏற்றது. இரத்தசோகை, அசதி, களைப்பு, மூச்சிரைப்பு மற்றும் நெஞ்சு வலிக்குக் காரணமாகும். பேரீச்சை இதைத் தடுக்கிறது. இரத்தத்தையும் பேரீச்சை சுத்திகரிக்கிறது.

சரும ஆரோக்கியம்

பேரீச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் டி, சருமத்தின் மீளும் தன்மையை அதிகரிக்கிறது. சருமத்தை மிருதுவாக பாதுகாக்கிறது. சரும பிரச்சினை இருப்பவர்கள் பேரீச்சையைத் திட்டமிட்டு நீண்ட காலம் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். உடலில் மெலனின் தேங்குவதைத் தடுத்து, இளமையான தோற்றத்தை அளிக்கிறது.

செரிமானம்

பேரீச்சை பழத்தில் நார்ச்சத்து அதிகம். ஆகவே, செரிமானம் ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு மலச்சிக்கலைத் தடுக்கிறது. எளிதாக மலம் கழியும்படி குடலை இயக்குகிறது. 21 நபர்களை ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களுக்குத் தினமும் 7 பேரீச்சை பழங்களென 21 நாள்கள் கொடுக்கப்பட்டது. பேரீச்சை சாப்பிடாதவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு மலம் எளிதாகக் கழிக்க முடிந்தது.

READ MORE ABOUT :

More Health News