ஐரோப்பியர்களால் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது மரவள்ளிக்கிழங்கு. தமிழகத்திலும் கேரளத்திலும் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. வறட்சியை தாங்கி மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உணவை தரும். ஆகவே மரவள்ளிக்கிழங்கு மண்ணுக்குள் இருக்கும் வைரம் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்தே ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது.
மரவள்ளியில் உள்ள சத்துகள்
அவித்த மரவள்ளிக்கிழங்கு நூறு கிராம் எடுத்தால் அதில் 112 கலோரி ஆற்றல், 27 கிராம் கார்போஹைடிரேடு, 1 கிராம் நார்ச்சத்து, ஒரு நாளைக்குத் தேவையான தையாமினில் 20 சதவீதம், பாஸ்பரஸில் 5 சதவீதம், கால்சியத்தில் (சுண்ணாம்புச் சத்து) 2 சதவீதம், ரிபோஃப்ளேவினின் 2 சதவீதம் இருக்கும். சிறிதளவு இரும்புச் சத்து, வைட்டமின் சி மற்றும் நியாசினும் கிடைக்கும்.
ஆற்றலின் உறைவிடம்
மரவள்ளிக்கிழங்கில் அதிக அளவு ஆற்றல் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். உடல் பருமனாகக்கூடும். ஆகவே, அளவாக அதாவது 75 கிராம் முதல் 115 கிராம் வரைக்கும் சாப்பிடலாம்.
சரும பொலிவு
மரவள்ளிக் கிழங்கின் தோலில் ஹைட்ரோ சைனிக் அமிலம் உள்ளது. மரவள்ளிக்கிழங்கின் தோல், நம்முடைய சருமத்திலுள்ள பல குறைபாடுகளை அகற்றும். மரவள்ளிக்கிழங்கின் தோலை சீவி, கூழாக்கி அதை சரும பாதிப்பு உள்ள இடத்தில் பூசவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவுவதால் நல்ல பலன் கிடைக்கும். இதை முகத்தில் பூசினால், முகத்திலுள்ள அதிக எண்ணெய் பசையை வெளியேற்றுவதுடன் துளைகளை மூடுகிறது. இதனால் சருமம் பொலிவு பெறுகிறது.
கூந்தல் ஆரோக்கியம்
ஊட்டச்சத்து குறைபாட்டால் தலைமுடி உதிர்ந்து இளமையில் வழுக்கை ஏற்படுகிறது. மரவள்ளிக்கிழங்கை கூழாக்கி, தலையில் பூசி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஊறவிட்டு குளிக்கவேண்டும். வாரம் இரண்டு முறை இவ்வாறு குளித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.
செரிமான மண்டலம்
மரவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதிலுள்ள நார்ச்சத்து, குடலிலுள்ள நச்சுக்களை உறிஞ்சி, செரிமான மண்டலத்தை சுத்தம் செய்கிறது; இரைப்பையில் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மரவள்ளிக்கிழங்கிலுள்ள ரெஸிஸ்டண்ட் ஸ்டார்ச் என்னும் ஒரு வகை ஸ்டார்ச், வயிற்றிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை வளர்க்கிறது. இதன் மூலம் குடல் அழற்சியை ஆற்றுகிறது.
கர்ப்பிணிகளுக்கு நல்லது
கர்ப்பிணி பெண்களுக்கு வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் சத்துகள் தேவை. கருவுறும் காலத்திலிருந்தே இந்த சத்துகள் பரிந்துரைக்கப்படும். இவை மரவள்ளிக்கிழங்கின் இலைகளில் காணப்படுகிறது. தினமும் உடலுக்குத் தேவைப்படும் ஃபோலேட் சத்தில் 15 சதவீதமும், தினமும் தேவைப்படும் சுண்ணாம்புச் சத்தில் 47 சதவீதமும் ஒரு கிண்ணம் மரவள்ளிக்கிழங்கில் உள்ளது. இறைச்சி சமைக்கும்போது இந்த இலையை சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
சில வல்லுநர்கள் மரவள்ளிக்கிழங்கின் மாவு நரம்புமண்டலத்தின் சமநிலையை பேண உதவுகிறது என்று கூறுகின்றனர். மனச்சோர்வு மற்றும் மனக்கலத்தை குறைக்கும் இயல்பு இம்மாவுக்கு உள்ளது. தசைகளுக்கு வலுவூட்டவும் இது உதவுகிறது.