உடல் எடை குறைவதற்கு ஜூஸ் குடித்தால் போதும்!

by SAM ASIR, Oct 7, 2020, 17:29 PM IST

உடல் எடை குறைவதற்கு பல்வேறு வழிமுறைகள் கூறப்படுகின்றன; ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. சாப்பிடும் அளவை குறைப்பது மற்றும் குறிப்பிட்ட உணவுப்பொருள்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் பலர் கடைப்பிடிக்கின்றனர்.

பழச்சாறு அருந்தினால் உடல் எடை குறையும் என்று யாராவது கூறினால் நம்புவீர்களா? ஆம், சில பழங்களைச் சாறு பிழிந்து பருகினால், சாப்பிடும் அளவை குறைக்கமுடியும்; வயிறு சுத்தமாகும்; ஈரலின் செயல்பாடு தூண்டப்படும். இவை எல்லாவற்றின் காரணமாகவும் உடல் எடை குறையும்.

பழச்சாறுகளில் பல்வேறு தாது உப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் நம் உடலின் மெட்டோபாலிஸம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டக்கூடிய ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்) நிறைந்துள்ளன.

காரட் ஜூஸ்

காரட்டில் குறைந்த அளவு கலோரி (ஆற்றல்) மற்றும் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஒரு பெரிய குவளை (தம்ளர்) நிறைய காரட் ஜூஸ் அருந்தினால், மதிய உணவு நேரம் வரும் வரைக்கும் பசிக்காது. ஆகவே, தேவையற்ற நொறுக்குத்தீனிகளைச் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது.

காரட் ஜூஸ், பித்தநீரைச் சுரக்க வைக்கிறது. இதன் காரணமாக உடலிலுள்ள கொழுப்பு எரிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக உடல் எடை குறைகிறது. காரட் உடன் ஒரு ஆப்பிள், ஆரஞ்சு பழத்தில் பாதி, சிறிதளவு இஞ்சி சேர்த்து சாறு எடுத்து அருந்தினால் உடலில் சேர்ந்துள்ள நச்சுகள் முழுவதும் அகற்றப்படும்.

பாகற்காய் ஜூஸ்

பாகற்காய் ஜூஸ் என்றவுடனே வாய்க்குள் கசப்பு தெரியும் அளவுக்கு அதைக் குறித்த விலகல் நம் மனதில் உள்ளது. தொடர்ந்து பாகற்காய் ஜூஸ் அருந்திவந்தால் ஈரலைத் தூண்டி அதிக அளவு பித்த அமிலங்களைச் சுரக்கவைக்கும். உடலிலுள்ள கொழுப்பில் வளர்சிதை மாற்றம் நடக்க பித்த அமிலங்கள் உதவுகின்றன. பாகற்காயில் கலோரியும் (ஆற்றல்) குறைவு. 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி மட்டுமே உண்டு. ஆகவே, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் பாகற்காய் ஜூஸை தொடர்ந்து அருந்தலாம்.

வெள்ளரி ஜூஸ்

உடல் எடை குறைவதற்கான எளிய பார்முலா (சூத்திரம்), குறைந்த கலோரி உணவுகளைச் சாப்பிட வேண்டும் அல்லது உடலிலுள்ள அதிக கலோரிகளை எரிக்கவேண்டும் என்பதாகும். வெள்ளரியில் அதிக நீர் உள்ளது; குறைந்த கலோரி (ஆற்றல்) காணப்படுகிறது. குறைந்த அளவு கலோரி உடலில் சேர்வதுடன், நெடுநேரத்திற்கு பசியைத் தாங்குவதற்கும் வெள்ளரி உதவும். வெள்ளரி ஜூஸ் உடன் கொஞ்சம் எலுமிச்சை சாறும், சில புதினா இலைகளையும் சேர்த்தால் வெயிலுக்கு இதமாக இருக்கும்.

நெல்லி சாறு

காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவது உடல் எடை குறைய உதவும். செரிமான மண்டலத்தைச் சரியாகச் செயல்பட வைப்பதோடு உடலின் வளர்சிதை மாற்றத்தையும் இது துரிதப்படுத்தும். வளர்சிதை மாற்றம் (மெட்டோபாலிஸம்) வேகமாக நடக்கும்போது கொழுப்பு துரிதமாக எரிக்கப்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் உடன் ஒரு சொட்டு தேன் கலந்து பருகினால் நல்ல பலன் தெரியும்.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ் சருமத்திற்கு அழகு கொடுக்கும் என்று கூறுவார்கள். அது உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவும். மாதுளையில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் உள்ளன. அவற்றுடன் பாலிபீனால்கள், லினோலெனிக் அமிலம் ஆகியவையும் சேர்ந்து உடலின் வளர்சிதை மாற்றத்தை (மெட்டோபாலிஸம்) ஊக்குவித்துக் கொழுப்பை எரியச் செய்கின்றன. மாதுளை ஜூஸ் பசியாற்ற உதவுவதால் எடையும் குறைகிறது.

கோஸ் சாறு

முட்டைகோஸ் எனப்படும் கோஸ் உடன் ஒரு ஆப்பிள் மற்றும் எலுமிச்சை அல்லது காரட், பீட்ரூட் போன்றவற்றைச் சேர்த்து ஜூஸ் எடுத்து அருந்தலாம். வயிற்று உப்பிசம், பொருமல், செரிமான கோளாறுகளை கோஸ் ஜூஸ் குணமாக்கும். செரிமான பாதையைச் சுத்தமாக்கி, கழிவுகளை விரைவில் வெளியேற்றும். அதிக அளவு நார்ச்சத்துள்ள உணவுப்பொருள்களை உண்பதால் கொழுப்பு எதிரான செயல்பாடு உடலில் நடைபெறும். அதிக நார்ச்சத்து கொண்ட உணவுப்பொருள்கள் உடலிலுள்ள நீரை உறிஞ்சி பசைபோன்று மாற்றுகின்றன. இது செரிமான வேகத்தைக் குறைக்கிறது. செரிமானம் மெதுவாக நடைபெறுவதால் பசி அதிகம் தோன்றாது. இதன் மூலம் நிறையச் சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம். 100 கிராம் தர்பூசணியில் 30 கலோரி மட்டுமே உண்டு. அதில் ஆர்ஜினைன் என்ற அமினோஅமிலம் அதிகமாக இருப்பதால் உடலிலுள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸை போன்ற ஆரோக்கியமான பானம் வேறு எதுவும் இல்லை என்று கூறுமளவுக்கு மிகக்குறைந்த கலோரி (ஆற்றல்) கொண்டது இது. ஆரஞ்சு ஜூஸ் மூலம் உடலில் சேரும் கலோரியின் அளவை விட அதை எரிப்பதற்கு அதிக கலோரி செலவாகும். அவ்வளவு குறைவான கலோரியை கொண்டிருப்பதால் இது மிகவும் ஆரோக்கியமானது.

அன்னாசி ஜூஸ்

நம் உடலிலுள்ள புரதத்தை வளர்சிதை மாற்றத்திற்குள்ளாகும் புரோமெலைன் என்னும் நொதி (என்சைம்) அன்னாசிப் பழத்தில் உள்ளது. இது வயிற்றிலுள்ள அதிகப்படியான கொழுப்பை எரிக்கிறது. புரோமெலைன் லைபேஸ் போன்ற மற்ற நொதிகளுடன் இணைந்து கொழுப்பைச் செரிக்க வைக்கிறது; பசி எடுப்பதைத் தடுக்கிறது.

சுரைக்காய் ஜூஸ்

ஆயுர்வேதத்தில் சுரைக்காய் ஜூஸ் சில வகை கொழுப்பினை கரைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. வெயில் காலத்திற்கு ஏற்றது மட்டுமல்ல; உடல் எடையைக் குறைப்பதற்கும் சுரைக்காய் சாறு நல்லது.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Health News