மூட்டுகள் மற்றும் எலும்பில் வலி ஏற்பட்டால் அது நம் தினசரி வாழ்க்கையை பெருமளவில் பாதிக்கும். எலும்பு மெலிதல் அல்லது எலும்புப் புரை என்று கூறப்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எலும்புகளை பலவீனப்படுத்தும் நோயாகும். பழைய எலும்பு திசுக்களுக்குப் பதிலாக நம் உடலில் புதிய எலும்பு திசுக்கள் நிரப்பப்படும். ஆனால், எலும்புப் புரை பாதிப்பு ஏற்பட்டால் புதிய எலும்பு உருவாதல் தாமதமாகும். முதியவர்களுக்கும் மாதவிடாய் நின்ற பெண்களையும் (மெனோபாஸ்) இது அதிகமாக பாதிக்கும். தற்போது இளம் வயதினருக்கும் இப்பாதிப்பு வருகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புள்ளவர்களுக்கு எலும்பு விரைவிலேயே சேதமடையும். ஆனால், எலும்பில் பாதிப்பு ஏற்பட்டால் குணமாவதற்கு நீண்டகாலம் பிடிக்கும்.
எலும்புக்கு பலம் அளிக்கக்கூடிய சில பழங்கள் உள்ளன. அவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் எலும்புப் புரை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் நம்மை காத்துக்கொள்ளலாம்.
அன்னாசி
அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. பொட்டாசியம் நம் உடலிலுள்ள அமில தன்மையை சமன்செய்யும். அதன் காரணமாக கால்சியம் இழப்பு தவிர்க்கப்படுகிறது. வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் ஆகிய சத்துகளும் அன்னாசிப்பழத்தில் உள்ளன. இவை எலும்பை உறுதியாக்கக்கூடியவை. ஆகவே, அன்னாசிப் பழம் சாப்பிடுவது எலும்பை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளும்.
பப்பாளி
கோடைக்காலத்தில் நமக்கு இதமளிக்கக்கூடிய பழங்களுள் பப்பாளியும் ஒன்று. பப்பாளி பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது எலும்புக்கும். தோலுக்கும் நன்மை செய்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
தக்காளி
எலும்பில் ஏற்படும் குறைகளை சரிசெய்யும் தன்மை தக்காளிக்கு உள்ளது. இது எலும்பின் நிறையை அதிகரிக்க செய்கிறது. வைட்டமின் கே, கால்சியம் மற்றும் லைகோபீன் ஆகியவை தக்காளியில் உள்ளன. இவை எலும்புக்கு பலம் அளிக்கின்றன.
ஆப்பிள்
ஆப்பிள் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய பழமாகிவிட்டது. ஆப்பிளின் கால்சியம், வைட்டமின் சி ஆகியவை உள்ளன. கால்சியம் எலும்பின் அடிப்படை சத்து ஆகும். வைட்டமின் சி புதிய எலும்பு உருவாவதை தூண்டக்கூடிய கொலேஜன் என்ற புரதம் உற்புத்தியாக உதவுகிறது/
ஸ்ட்ராபெர்ரி
நம் உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய நிலையற்ற அணுக்களான ஃப்ரீ ராடிகல்களுக்கு எதிராக செயல்படக்கூடிய ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) ஸ்ட்ராபெர்ரியில் உள்ளன. கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின்கள் கே மற்றும் சி ஆகியவையும் புதிய எலும்பு உருவாக உதவுகின்றன.