இரவில் இளநீர் அருந்தலாமா? கர்ப்பிணிகள் ஏன் இளநீர் அருந்தவேண்டும்?

by SAM ASIR, Apr 14, 2021, 22:32 PM IST

கோடைக்காலம் வந்தால் மட்டுமே நம் மனம் சிலவற்றை நாடுகிறது. கோடை மட்டுமல்ல, எப்போதும் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய ஒன்று இளநீர் ஆகும். இளநீர் அருந்தியவுடன் உடலுக்கு ஆற்றலை தருகிறது. இதில் இயற்கையான என்சைம்கள் (நொதிகள்) உள்ளன. பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

இளநீரில் உள்ள ஊட்டச்சத்துகள்

250 மில்லி லிட்டர் இளநீரில் 9 கிராம் கார்போஹைடிரேடு, 3 கிராம் நார்ச்சத்து, 2 கிராம் புரதம், பரிந்துரைக்கப்பட்டுள்ள வைட்டமின் சி அளவில் 10 சதவீதம், அதேபோன்று 15 சதவீதம் மெக்னீசியம், 17 சதவீதம் மாங்கனீசு, 17 சதவீதம் பொட்டாசியம், 11 சதவீதம் சோடியம் மற்றும் 6 சதவீதம் கால்சியம் ஆகியவை உள்ளன.

எப்போது அருந்தவேண்டும்?

இளநீரை எப்பொழுதெல்லாம் குடிக்கலாம் என்று சிலருக்கு சந்தேகம் வரும். இளநீரை இரவிலும் அருந்தலாம். அதற்கென்று குறிப்பிட்ட நேரம் கிடையாது. இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது. அது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி, உடல் எடை குறைவுக்கு வழிவகுக்கிறது.

கர்ப்பிணிகள்

உடலில் நீர்ச்சத்து இழப்பினால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க கர்ப்பிணிகள் இளநீர் அருந்தவேண்டும். மலச்சிக்கலையும் இது நீக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மயக்கம், நெஞ்செரிச்சல் ஆகிய உபாதைகளை இளநீர் குணப்படுத்தும். ஆகவே, கர்ப்பிணிகள் இளநீரை அதிகமாக அருந்தவேண்டும்.

சிறுநீரக கல்

அதிக அளவு திரவங்கள், பானங்களை அருந்தினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் தடுக்கலாம். சாதாரண தண்ணீரே போதுமானது. சிறுநீரக கற்கள் கால்சியம், ஆக்ஸலேட் ஆகிய கூட்டுப்பொருள்களால் உருவாகிறது. இவை படிகமாகி சிறுநீரில் கற்களாக மாறுகின்றன. எலிகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இளநீரானது இந்த படிகங்கள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்வதைத் தடுக்கிறது. சிறுநீரில் படிகங்கள் உருவாகும் எண்ணிக்கையையும் இளநீர் தடுக்கிறது.

நீரிழிவு

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை இளநீர் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இளநீரில் மெக்னீசியம் உள்ளது. அது நீரிழிவு வருவதற்கான நிலையில் இருப்போர் மற்றும் இன்சுலின் போதாமையால் வரக்கூடிய இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு உடலில் இன்சுலினை உணரும் திறனை ஊக்குவித்து நீரிழிவு பாதிப்பை குறைக்கும்.

இரத்த அழுத்தம்

உடலிலுள்ள செல்களை பாதிக்கக்கூடிய நிலையற்ற அணுக்களுக்கு (ஃப்ரீ ராடிகல்ஸ்) எதிராக இளநீர் செயல்படுகிறது. இது உடலிலுள்ள உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைப்பது டிரைகிளிசராய்டுகளை கட்டுப்படுத்துவது போன்ற இயல்பு இளநீருக்கு உண்டு. இவை இதய ஆரோக்கியத்தை காக்க உதவுகின்றன.

You'r reading இரவில் இளநீர் அருந்தலாமா? கர்ப்பிணிகள் ஏன் இளநீர் அருந்தவேண்டும்? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை