கொரோனா பெருந்தொற்று தலைவிரித்து ஆடுகிறது. நுரையீரலின் ஆரோக்கியத்தை காத்துக்கொள்வதே இப்போது முக்கியம் என்று அனைத்து மருத்துவ வல்லுநர்களும் கூறுகிறார்கள். கொரோனா பாதித்தவர்கள் அனைவருக்கே சுவாச பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. நிமோனியா, ஏஆர்டிஎஸ் என்னும் சுவாச கோளாறு (acute respiratory distress syndrome), செப்சிஸ் ஆகிய பாதிப்புகள் நுரையீரலின் செயல்பாட்டை தடுக்கின்றன. கோவிட்-19 பாதிப்புக்குக் காரணமாகும் SARS-CoV-2 வைரஸ் பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்தியா முழுவதும் கோவிட் பாதிப்புகள் அதிகமாகி வரும் வேளையில் வைட்டமின் சி, துத்தநாகம் (ஸிங்க்)போன்ற ஊட்டச்சத்துகளோடு, ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்டுகள்)உள்ள உணவுகளை சாப்பிடுவதோடு, சுவாச பயிற்சிகளையும் ஒழுங்காக செய்வதும் அவசியம். நுரையீரலுக்கு சுகம் தரும் மூலிகை டீ ஒன்றை தினமும் பருகலாம்.
தேவையானவை: சிறிதளவு இஞ்சி, 1 தேக்கரண்டி இஞ்சி பொடி (இஞ்சியை உலர வைத்து இடிக்கலாம்; சுக்குப் பொடி), இலவங்கபட்டை அல்லது பட்டை தூள், துளசி இலைகள் சில, கற்பூரவல்லி இலையை உலர்த்தி பொடித்த பொடி - 1 தேக்கரண்டி, 3 மிளகு, 2 ஏலக்காய் (நசுக்கியது), கால் தேக்கரண்டி அளவு வெந்தயம், ஓமம் ஒரு சிட்டிகை, சிறிதளவு சீரகம், 2 கிராம்பு
செய்முறை: மேலே கூறிய அனைத்தையும் இரண்டு கப் அளவு தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்கவும், 10 நிமிடம் கொதித்த பின்னர் ஜூவாலையை மிதமாக வைக்கவும் (சிம்மர்). பின் வடிகட்டி அருந்தவும்.
அருந்துவதற்கு நெடி வீசுவதுபோல் உணர்ந்தால் சிறிதளவு தேன் அல்லது வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.