போட்டோ எடுத்ததற்கு தாக்கியதால் இளைஞர்கள் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ், ராஜ் குமார். நண்பர்களான இவர்கள் பெயிண்டர் வேலைப் பார்த்துவந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையேம் நேற்று இரவு நண்பர்கள் இருவரும் அந்தப் பகுதில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு நின்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ஆண்டாள் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜெகநாதன் என்பவர் இவர்களுக்கு தெரியும் என்பதால் இவர்களை மதுபோதையில் இருக்கும் போது தனது செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் போதையில், ``நீ எப்படி எங்களை போட்டோ எடுக்கலாம்" எனக் கேட்டு ஜெகநாதனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மூவருக்கும் இடையேயான தகராறு முற்றவே, ஜெகநாதனை இருவரும் அடித்து உதைத்து அவரது செல்போனை பறித்துள்ள்ளனர். இந்த சம்பவங்கள் முழுவதும் பொதுமக்கள் முன்னிலையில் நடந்துள்ளது. பொதுமக்கள் முன்னிலையில் அடிவாங்கியதை நினைத்து ஆத்திரமடைந்த ஜெகநாதன் தனது வீட்டுக்கு உடனடியாக சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து திரும்பி டாஸ்மாக் கடை பகுதிக்கே வந்துள்ளார். அப்போது டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த பிரகாஷ், ராஜ்குமார் இருவரையும் அவர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
போதையில் இருந்த இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுக்க அவர்கள் இளைஞர்கள் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரம் கழித்து ஆட்டோ டிரைவர் ஜெகநாதன் கோட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.