சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேர்வுக்கு தாமதமாக வந்ததை கண்டித்த ஆசிரியை மாணவர் தகாத வார்த்தையால் திட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள பொட்டியபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் புவனேஸ்வரிக்கும், பள்ளி ஆசிரியை கிரிஜாவிற்கும் இடையே முன்விரோதம் இருப்பதாக தெரிகிறது. இதனால், இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரு கோஷ்டிக்கு இடையே அடிக்கடி பள்ளியில் தகராறு நடந்துள்ளது.
அதனால், இரண்டு ஆசிரியைகளையும் வெவ்வேறு பள்ளிக்கு மாற்றுமாறு கிராம மக்கள் பலமுறை வட்டார தொடக்கக்கல்வி அலுவலரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யவில்லை. இரண்டு ஆசிரியர்களும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தூண்டிவிட்டு தொடர்ந்து பிரச்சினை செய்துவருவதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.
இன்றைய தினம், 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வெற்றிவேல் பள்ளிக்கு மிகவும் தாமதமாக வந்துள்ளார். அதற்கு பள்ளியின் வகுப்பாசிரியர் கிரிஜா மாணவரை கண்டித்துள்ளார். மேலும், பெஞ்ச் மீது நிற்குமாறு கூறியுள்ளார். அதை மதிக்காத மாணவன் வெற்றிவேல் தேர்வு அட்டையை தூக்கி வீசி ஆசிரியை தாக்கியுள்ளார்.
மேலும், ஆசிரியை ஆபாசமாக திட்டி மிரட்டவும் செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓமலூர் போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி ஆசிரியர்கள் இரண்டு கோஷ்டியாக செயல்படுவதே மாணவர்களின் இதுபோன்ற செயலுக்கு காரணம் என்பது தெரிய வந்தது.