சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ. ஜி பொன் மாணிக்கவேலின் பதவி காலத்தை நீட்டிக்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ. ஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழுவினரே விசாரிக்க வேண்டும் என கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, இதன் அடிப்படையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது,
இந்நிலையில், நவம்பர் 3 ம் தேதியுடன்பொன்.மாணிக்கவேல் அவர்களின் பதவி காலம் முடிவடைய உள்ளதால், அவரது பதவி காலத்தை நீட்டிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென சென்னை தியாகராய நகரை சேர்ந்த ஸ்ரீ தரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்,
இந்த மனுவில், பொன். மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்றுவிட்டால் அது சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்துவதுடன், விசாரணையை ஸ்தம்பிக்க செய்துவிடும் என குறிப்பிட்டிருந்தார்,
இந்த மனு இன்று நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எதன் அடிப்படையில் மனு தாக்கல் செய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு நிர்வாகத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினர். உள்நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதால் அபராதம் விதிக்க போவதாக மனுதாரரை நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதனிடையே, கண்டறியப்பட்ட சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்து வரும் தொல்லியல் துறையின் தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யபட்டது.
அதில் இதுவரை 630 சிலைகள் மற்றும் புராதன பொருட்களின் தொன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பொருட்களின் தொன்மை குறித்து ஆய்வு செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.