வயலில் இறங்கி நாற்று நட்ட விவசாயி எடப்பாடி பழனிசாமி..

நீடாமங்கலம் அருகே வயலில் இறங்கி நாற்று நட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என்று நீண்ட நாட்களாகக் கூறி வருகிறார். இதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். எட்டுவழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்தும் விஷயத்தில் விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத எடப்பாடி பழனிசாமி எப்படி ஒரு விவசாயியாக இருப்பார் என்று அவர் விமர்சித்திருந்தார். நாட்டில் விவசாயிகள் கடனை அடைக்க வழியில்லாமல் தற்கொலை செய்யும் நிலையில் இருக்கும்போது, பல கோடிகள் சம்பாதித்து ஆடம்பரமாக வாழும் அரசியல்வாதிகள் தங்களை விவசாயி, பாட்டாளி என்று சொல்லிக் கொள்வதைப் பலரும் விமர்சிக்கிறார்கள்.
ஆனாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்றும், விவசாயியாகவே வரி கட்டி வருகிறேன் என்றும் கூறுகிறார். இந்நிலையில், அவர் நாகை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கி வைப்பதற்காக இன்று காலையில் நீடாமங்கலம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நீடாமங்கலம் அடுத்த கொண்டையாறு கிராமத்தில் வயலில் பெண்கள் நாற்று நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வயலில் இறங்கும் ஆசை ஏற்பட்டது. அவர் தனது டிரைவரிடம் காரை நிறுத்தச் சொன்னார். காரை விட்டு இறங்கிய அவர், அந்த வயலுக்குள் நடந்து சென்றார். அவரை பார்த்ததும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அவர்களுடன் பேசிய முதலமைச்சர், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து நாற்று நட்டார்.
இதன்பின்பு, அவர்களிடம் முதலமைச்சர் பேசுகையில், நானும் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். ஊருக்குச் செல்லும் போதெல்லாம் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் விவசாயிகளிடம் பேசி குறைகளைக் கேட்டறிகிறேன் என்று தெரிவித்தார்.

Advertisement