அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து சசிகலா படத்தைத் தூக்கியெறிந்த நாளில் இருந்தே, தனக்கான செல்வாக்கு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் எந்தக் கோரிக்கைளும் நிறைவேற்றப்படுவதில்லை. தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் வேலைகளை அவர் தொடங்கியிருக்கிறார்.
இதனை மிகுந்த எச்சரிக்கையோடு கவனித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. சசிகலா குடும்பத்துக்கும் தனக்கும் எந்த வகையிலும் நெருக்கம் இல்லை, அந்தக் குடும்பத்தில் சசிகலா, தினகரனைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் என செய்தியாளர்கள் சந்திப்பிலும் உறுதியாகக் கூறிவிட்டார்.
ஆனால் இளவரசி குடும்பத்துடன் அதிமுக தரப்பு நெருக்கம் காட்டி வருகிறது என்கின்றனர் பன்னீர்செல்வம் தரப்பினர். இதற்கு ஆதாரமாக, சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் சாராய ஆலை உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சி உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு வரையில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு குறைந்த அளவே சரக்குகள் வாங்கப்பட்டன.
கடந்த சில வாரங்களில் மிடாஸிடம் இருந்து அதிகளவில் கொள்முதல் செய்கிறார்களாம். இதனால் 22 சதவீதத்தில் இருந்து 28 சதவீதம் வரையில் மிடாஸிடம் இருந்து பெறப்படும் அரசின் கொள்முதல் அதிகரித்துவிட்டதாம். எடப்பாடி பழனிசாமியோடு விவேக் ஜெயராமன் காட்டும் நெருக்கம்தான், வர்த்தகம் உயர்ந்ததற்குக் காரணமாம். இந்த பிசினஸ் டீலிங்கை அதிர்ச்சியோடு கவனித்து வருகிறார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன்.
- அருள் திலீபன்