புல்வாமா தாக்குதல் நடந்த நேரத்தில் பிரதமர் மோடி டாக்குமெண்டரி பட சூட்டிங்கில் இருந்ததாகவும், தகவல் தெரிந்தும் சூட்டிங்கை தொடர்ந்ததாகவும், இதுதான் பிரதமர் மோடியின் நாட்டுப்பற்றா? என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14-ந் தேதி தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்த செய்தியால், துக்கத்தில் துக்கத்தில் ஒட்டுமொத்த இந்தியாவே கதறித் துடித்தது. இந்த வேளையில் நாட்டின் பிரதமர் மோடி ஹாயாக, படு உற்சாகமாக விளம்பர டாக்குமெண்டரி படத்தின் சூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்தார் என்று குற்றம் சாட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதல் சம்பவம் 14-ந் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு நடந்தது. அப்போது பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ் பெற்ற கோர்பெட் புலிகள் சரணாலயத்தில் டிஸ்கவரி சேனலின் டாக்குமெண்டரி படத்திற்கான சூட்டிங்கில் பிசியாக இருந்துள்ளார். தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் செய்தி கேட்டு நாடே துயரத்தில் மூழ்கியது. இந்தச் செய்தி நாட்டின் பிரதமருக்கு தெரியாமலா போயிருக்கும்?.ஆனால் அதன் பின்பும் பின்னணியில் பாஜக கோஷம் முழங்க சூட்டிங்கை தொடர்ந்துள்ளார். படகு சவாரியும் செய்துள்ளார். இது தான் பிரதமரின் ராஜ தர்மமா? நாட்டுப்பற்றை விட தன்னைப் பற்றிய விளம்பரம் தான் பிரதமர் மோடிக்கு முக்கியமாகிப் போய் விட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து விட்டார்.
ஆனால் வீரர்கள் உயிர்த்தியாகத்தால் நாடே பசி மறந்து துயரத்தில் துடிக்க, இரவு 7 மணி வரை சூட்டிங்கை தொடர்ந்த பிரதமர் மோடி, அரசுப் பணத்தில் இடையிடையே டீ, சமோசாவும் சாப்பிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரதமர் நாட்டின் மீது வைத்துள்ள அக்கறை இவ்வளவுதானா? தேசபக்தி என்று முழங்குவது வெற்றுக் கோஷம் தானா?என்று காங்கிரஸ் கட்சி விளாசியுள்ளது.
பிரதமர் மோடி மீது காங்கிரஸ் சுமத்தியுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் வட மாநில தினசரிகளில் விலாவாரியாக வெளியான நிலையிலும், பிரதமர் அலுவலகமோ, பாஜகவோ எந்த விளக்கமோ, மறுப்போ தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.