புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் விடுமுறைக்காக விமானத்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதல் - 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் விடுமுறையில் சொந்த ஊர் சென்று மீண்டும் பணிக்குத் திரும்பும்போது ஜம்மு அல்லது ஸ்ரீ நகரில் சில நாட்கள் தங்க வைக்கப்படுகின்றனர். பின்னர் அனைவரையும் மொத்தமாக பணியிடங்களுக்கு ஏராளமான வாகனங்களில் அணிவகுப்பாக அனுப்புவது வழக்கமாக இருந்து வந்தது.
அப்படி அணிவகுப்பாக 78 வாகனங்களில் 2500 வீரர்கள் செல்லும் போது தான் புல்வாமா தாக்குதல் நடந்து 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
இதனால் இனிமேல் வீரர்களின் உயிர் பாதுகாப்பு கருதி, காலவிரயத்தை குறைக்கவும் ஜம்மு காஷ்மீரில் பணிபுரியும் அனைத்து வீரர்களும் இனிமேல் விமானத்தில் செல்லலாம் என்று உள்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன் அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த விமானச் சலுகை இருந்தது. தற்போதைய உத்தரவால் ஜம்மு காஷ்மீரில் பணிபுரியும் சுமார் 8 லட்சம் வீரர்கள் பயன் அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.