திருச்சியில் நடந்த கூட்டத்தில், வைகோவுடனான நட்பு குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கமாக, போர் வாளும், தளபதியும் ஒன்றிணைந்துள்ளோம் என்று பேச, மேடையிலேயே உணர்ச்சிப் பெருக்கில் வைகோ கதறியழுதார்.
மதிமுக சார்பில் திருச்சியில், மறைந்த கருணாநிதியின் நினைவுகளைப் போற்றும் வகையில் தமிழேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.
தலைவர் கருணாநியால் போர்வாள் என்றழைக்கப்பட்ட வைகோவும், தளபதி என்றழைக்கப்பட்ட நானும் திராவிட இயக்கத்தைக் காக்க ஒரே மேடையில் இணைந்துள்ளோம்.
வயது முதிர்வால் கருணாநிதி ஓய்வெடுத்த போது வீட்டிற்கு வந்த வைகோ, தலைவரின் கைகளைப் பற்றிக் கொண்டு, உங்களுக்கு எப்படித் துணையாக இருந்தேனோ அதே போல் தளபதிக்கும் துணை நிற்பேன் என்று கூறியது அப்படியே நினைவில் உள்ளது.
ஸ்டெர்லைட், முல்லைப் பெரியார், காவிரி பிரச்னைக்காக 30 ஆண்டுகளாக போராடும் போராளி வைகோவின் போராட்டங்களுக்கு திமுக துணை நிற்கும் என்றார் ஸ்டாலின் .
தற்போது நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை கூட்டணி வென்றிட புயல் வேக பயணத்திற்கு வைகோ தயாராகி விட்டார். மதப் பயங்கரவாதத்தை ஒழிக்க போர்வாள்களும் தளபதிகளும் ஒன்று சேர்ந்துள்ளோம் என்று ஸ்டாலின் பேசப் பேச உணர்ச்சிப் பெருக்கில் வைகோ கண்ணீர் சிந்தி கதறியழுதார். இதனால் கூட்டத்தில் பங்கேற்றவர்களும் உணர்ச்சிவயப்பட்டனர்.