ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபி எஸ் தலைமையில் ஒரு அணி உருவானது .எடப்பாடி அரசு நம்பிக்கை வாக் கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்த போது, ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். பின்னர் இரு அணிகளும் இணைந்தன.
இந்நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த காரணத்திற்காக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் ஓபிஎஸ் தரப்பிலும் 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தரப்பில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால் திமுக கொறடா சக்ரபாணி, மற்றும் தினகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சக்ரபாணி மற்றும் தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய ஏ.கே.சிக்ரி தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி கோரிக்கையை நிராகரித்தனர்.
இதனால் மக்களவைத் தேர்தல் நேரத்தில் தீர்ப்பு பாதகமாக வந்து விடுமோ? என்ற பதட்டத்தில் இருந்த ஓ.பி.எஸ் தரப்பு இடைக்கால நிம்மதி கிடைத்துள்ளது எனலாம்.