சசிகலாவுக்காக நான் பரிதாபப்படுகிறேன்! தினகரனை கடுமையாக விளாசிய திவாகரன்!!

Divakaran slams Dinakaran

Feb 25, 2019, 15:31 PM IST

ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். நேற்று மன்னார்குடி தேரடி திடலில் நடந்த கூட்டத்தில் பேசிய திவாகரன், ' மகளிர் நலன், இளைஞர் நலன், விவசாயிகள் நலன், நாட்டின் தூய்மை, இயற்கை வள பாதுகாப்பு ஆகியவை தான் நம்முடைய குறிக்கோள்.

ஜெயலலிதாவைப் பலமுறை பல்வேறு விபத்துகளில் இருந்து காப்பாற்றி இருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் இப்படி ஒரு அசைக்கமுடியாத சக்தியாக வருவார் என எதிர்பார்த்து செய்யவில்லை.

என்னுடன் மன்னார்குடியைச் சேர்ந்த 15 பேர் இருந்தார்கள். நாங்கள் தான் முதன்முதலில் ஜெயலலிதாவுக்கு ரிங் ரவுண்ட் அமைத்தோம். அதன்பிறகுதான் ராஜீவ் காந்திக்கே ரிங் ரவுண்ட் அமைத்தார்கள்.

இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு 1991ல் ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்கினோம். அதன்பிறகு சில வியாபாரிகள் உள்ளே வந்தார்கள். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் உள்ளே நுழைந்தார்கள்.

அதில் வானத்தைப் பார்த்து விட்டு வெறுமனே வந்தது நான் ஒரு ஆள்தான். இந்த வியாபாரிகளால் தான் ஆட்சியின் தன்மையே மாறி போனது.

டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா இறந்தார். அன்று நான் பத்தே முக்காலுக்கு அப்போலோ சென்றேன். அதுவரை அதிகாரிகளும் அமைச்சர்களும் அமைதியாக இருந்தார்கள்.

நான் உடனே தலைமை செயலாளரை அழைத்து, அம்மா இறந்ததை டிக்ளேர் செய்யச் சொன்னேன். அடுத்ததாக, ஆட்சியும் கட்சியும் நன்றாக இருக்கவேண்டும் என எண்ணி அம்மாவால் இரண்டு முறை முதல்வர் ஆக்கப்பட்ட அண்ணன் ஓ பி எஸ்ஸை முதல்வர் ஆக்கினேன்.

நான் நினைத்திருந்தால் அன்றைக்கு எனக்கு வேட்டு வைத்தவர்களை எல்லாம் நீக்கிவிட்டு புதியவர்களை அமைச்சராகி இருக்கலாம். நான் அதைச் செய்யவில்லை.

காரணம் கட்சியும் ஆட்சியும் நன்றாக இருக்கட்டும், நம்ம பொழப்பு தனியாக இருக்கட்டும் என்ற நல்லெண்ணம்தான்.

அதன் பிறகு திடீரென்று அரசியலில் குதித்து முதலமைச்சராக வேண்டும் என்று அண்ணன் ஓபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுத்து அவமானப்படுத்தி எழுதி வாங்கினார்கள்.

அது நடக்காமல் போனது. அதன்பிறகு எடப்பாடியை முதல்வராக்குவதற்கு கூவத்தூரில் கஷ்டப்பட்டது எல்லாம் நம்ம மன்னார்குடி பிள்ளைகள்தான். எம்எல்ஏக்கள் எல்லாம் உள்ளே ஜோராக வாழ்ந்தார்கள்.

என்னைச் சுற்றி சில நந்திகளும் இருந்தது. அதெல்லாம் இப்போது நகர்ந்துவிட்டது. எனக்கு ஒரு சகோதரி இருந்தார். அவர் தற்போது சிறையில் இருக்கிறார்.

அவர் சிலரை நம்பி கழுத்து அறுக்கப்பட்டு இருக்கிறார். போகிற போக்கில் ஒருத்தரை பிடித்து நிறுத்திவிட்டு போனார். அவர், இன்று முதலமைச்சர் ஆவேன், நாளை முதல் அமைச்சராவேன், இரட்டை இலையை முடக்குவேன், அதிமுகவை அழிப்பேன் என்றெல்லாம் பேசி வருகிறார்.

என் சகோதரி பிடித்த அத்தனை பிள்ளையாரும் பிடிக்கப் போய் குரங்காக ஆகிவிட்டது. அவருக்காக நான் பரிதாபப்படுகிறேன். இதுவரை அரசியலில் பின்னணியில் இருந்தேன். நான் ஃபீல்டுக்கு வராமல் இருந்தது என் தவறு. இப்போது லேட்டாக வந்து இருக்கிறேன். ஆனால் லேட்டஸ்டாக வந்திருக்கிறேன் என்றார்.

நாங்கள் இப்போது அரசியலில் ஜீரோவிலிருந்து தொடங்கினாலும். விரைவில் உயரத்தை எட்டிப் பிடிப்போம் அதற்கான துணிச்சலும் ஆற்றலும் எங்களிடம் உள்ளது. விரைவில் அதை நிரூபித்துக் காட்டுவோம்' என்றார் திவாகரன்.

You'r reading சசிகலாவுக்காக நான் பரிதாபப்படுகிறேன்! தினகரனை கடுமையாக விளாசிய திவாகரன்!! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை