சில தினங்களுக்கு முன்பு வரை தேமுதிகவிற்கு இருந்த மவுசு, தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. கூட்டணி விஷயத்தில் தேமுதிக காட்டிய முதிர்ச்சியின்மையே, இந்நிலைக்கு வழிவகுத்தது.
தெய்வத்துடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்ற முழக்கத்தோடு, 2006 சட்டசபை தேர்தலை விஜயகாந்த் சந்தித்தார். போட்டியிட்ட 232 தொகுதிகளில், விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற, மற்ற இடங்களில் அது தோல்வியை தழுவினாலும், 8.45% வாக்குகளை பெற்றது. 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மூன்றாமிடத்தை பெற்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நம்பிக்கையில் தான், 2009 நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் தனித்து நின்றார். இதில், 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்த போதும், 10%க்கும் மேல் வாக்குகளை பெற்று, அரசியல் களத்தில் தனக்குரிய இடத்தை பிடித்தது. ஆனால், 2011 சட்டசபை தேர்தலில், தன்னை அதிகம் விமர்ச்சித்த ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்தது, அவர் மீதான நடுநிலை வாக்காளர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது.
அப்போதிருந்தே தேமுதிகவுக்கு பிரச்சனைகள் தொடங்கின. அந்த தேர்தலில் 41 சட்டசபை தொகுதிகளை பெற்று, அதில் 29 இடங்களை வென்ற தேமுதிக, பிரதான எதிர்க்கட்சியானது. ஆனால், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சிலரை அதிமுக இழுக்க, கட்சியை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம் விஜயகாந்திற்கு ஏற்பட்டது.
அடுத்து வந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுடன் கைகோர்த்தார். ஆனால், இதில் படுதோல்வியை சந்தித்தது, வாக்கு விகிதத்தையும் பெருமளவு தேமுதிக இழந்திருந்தது. அதன் பின் தேமுதிகவும் சரி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்தும் சரி இதுவரை எழுந்திருக்க இயலாமல் போய்விட்டது.
இந்த சூழலில் தான் நாடாளுமன்ற தேர்தலை தற்போது எதிர்கொள்கிறது தேமுதிக. கடந்த கால சரிவுகளில் இருந்து மீண்டெழும் வகையில், இம்முறை வியூகம் அமைத்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதிர்சியற்ற தலைமை, அனுபவமற்ற நிர்வாகிகளால் அது கைகூடாமல் போய்விட்டது.
கடந்த வாரம் வரை உடல் நலனை விசாரிக்கும் சாக்கில் விஜயகாந்த்தை சந்தித்து, தே.மு.தி.க.வை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் இழுத்து வந்து விட வேண்டுமென்று போட்டியிட்ட இரு கழகங்களும், இன்று அதை சீண்டத் தயாராக இல்லை.
ஒருபுறம் அதிமுக கூட்டணியில் இணைய, பாஜக வாயிலாக பேசிக் கொண்டே, திமுகவிடமும் தூது விட்டது தேமுதிக. கூட்டணி விஷயத்தில் தேமுதிக தலைமை காட்டிய அசாத்திய பொறுமையும், இழுத்தடிப்பும் திமுக, அதிமுகவை எரிச்சலடைய செய்தன.
தொகுதி எண்ணிக்கை விஷயத்தில் கொஞ்சமும் இறங்கி வர மறுத்ததால், திடீரென கூட்டணி கதவை திமுக மூடியது. இதை எதிர்பாராத தேமுதிகவுக்கு, இனி அதிமுக மட்டுமே கதி என்ற நிலை ஏற்பட்டது. மோடி வருகையின் போதே கூட்டணியை உறுதிப்படுத்த விரும்பிய அதிமுக தலைமைக்கு, தேமுதிக போக்கு காட்டியது. இதனால் கோபமடைந்த அதிமுக தலைமை, தேமுதிகவிற்கு நான்கு இடங்களுக்கு மேல் கிடையாது என்று தனது பிடியை இறுக்கியது.
நொந்து போன விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், தனது நிர்வாகிகளை துரைமுருகனிடம் அனுப்பினார். அங்கு தான் சிக்கலும் ஆரம்பித்தது. தனிப்பட்ட விஷயங்களுக்க சந்திப்பு என்று நிர்வாகிகள், ஊடகங்களிடம் சொல்ல, அரசியல் தான் பேசினார்கள் என்று துரைமுருகன் தன் பாணியில் போட்டு உடைத்தார்.
அத்துடனாவது சுதீஷ் விட்டிருக்கலாம்; துரைமுருகனுக்கு பதிலடி தருவதாக நினைத்து, திமுக தலைமை பற்றி துரைமுருகன் பேசியதை சொல்லவா என்று லாவணி பாட, தேமுதிகவின் ஒட்டுமொத்த இமேஜும் சரிந்து, இரண்டும் கெட்டானாகிவிட்டது. இனி, அதிமுக தரும் இரண்டொரு இடங்களுடன் திருப்தியடைய வேண்டிய பரிதாபம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
காதும் காதுமாக கூட்டணி பேரங்களை பேசி, நாசுக்காக காய் நகர்த்துவதற்கு பதில், இங்கு செல்வதா, அங்கு செல்வதா என்று முடிவெடுப்பதில் தேமுதிக காட்டிய தடுமாற்றம், அக்கட்சியின் பெயரை கெடுத்து பலவீனப்படுத்திவிட்டது.
சிம்மாசனம் போட்டு அழைத்த போது, ராஜநடை போட்டு கூட்டணிக்குள் நுழைந்திருக்க வேண்டிய தேமுதிக அமைதி காத்ததால், இன்று வேண்டா விருந்தாளியாக பார்க்கப்படுகிறது. இதனால், ஓய்வில் இருக்க வேண்டிய விஜயகாந்தை நிம்மதியிழந்துள்ளார். மாற்றத்தை தரப்போகிறது என்று ஒரு காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிகவால், இன்று ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.