லோக்சபா தேர்தல் நிலைப்பாடுகளால் மனித நேய மக்கள் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தால் அமமுக பக்கம் ஜவாஹிருல்லாவும் திமுக பக்கம் ஹைதர் அலியும் செல்லக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமே இரண்டாக உடையும் சூழல் உருவாகியிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணியில் மமகவுக்கு சீட் மறுக்கப்பட்டுவிட்டது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்டாலின் வலியுறுத்தியதை ஜவாஹிருல்லா ஏற்க மறுத்துவிட்டார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் விஷயம் அறிந்தவர்கள், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரையில் ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார் ஜவாஹிருல்லா. இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர், மமக மீது அதிக கோபத்தில் இருந்தனர்.
இந்தமுறை எம்பி சீட்டுக்காக அவர்கள் வந்தபோது, ஹைதர் அலிக்கு வேண்டுமானாலும் சீட் கொடுக்கிறோம் எனக் கூறியுள்ளனர். இந்தத் தகவல் ஜவாஹிருல்லா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் தேர்தலில் ஏதாவது ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால், அமமுக பக்கம் போகலாம் என மமக நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். இதற்கு எதிராக, மமக தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஹைதர் அலி.
இதன் தொடர்ச்சியாக தமுமுகவை இரண்டாக உடைத்து, திமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் நிலையை அவர் எடுக்க இருக்கிறார். இன்று நடக்கவிருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் வெடிக்க இருக்கிறது.
அதற்குள் தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டி, நடந்த சம்பவங்களை விளக்க இருக்கிறார் ஹைதர் அலி. இந்த சண்டைகளால், தமுமுகவுக்குள் நடந்து வந்த பல்வேறு திரைமறைவான விஷயங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
- அருள் திலீபன்