கடந்த வாரம் சூரத்தில் வைரங்களில் விலை 30 சதவீதம் வரை சரிவை சந்தித்தது. மறைந்த தமிழக அரசியல் புள்ளி ஒருவர் வாங்கி குவித்திருந்த 2 லட்சம் கேரட் வைரங்கள் மீண்டும் விற்பனைக்கு வந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் சூரத்தில் வைரச் சந்தை செயல்படுகிறது. இங்கு கற்கள் பட்டை தீட்டுதல், பாலீஷ் போடுதல், அது தொடர்புடைய தொழில் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம், +11 என்ற ரகத்தை சேர்ந்த வைரங்களின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. இந்த விலை வீழ்ச்சி, ஒரே நாளில் 30% என்றளவில் இருந்தது.
தமிழகத்தில் இருந்து +11 ரக வைரங்கள் பெருமளவு மும்பை வைரச் சந்தைக்கு சென்றதால் சென்றதால் தான், இந்த விலைச்சரிவு ஏற்பட்டதாக வைர தரகர்கள் தெரிவித்தனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 2016ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலிதா தரப்பில், மும்பை வைரச் சந்தையில் இரண்டு லட்சம் கேரட்டிற்கு மேல் +11 ரக வைரங்களை வாங்கியதாக, அவர்கள் மத்தியில் ஒரு தகவல் உலவுகிறது.
ஜெயலிதாவின் மறைவுக்கு பின், அவருக்கு நெருக்கமான சிலர், இந்த வைரங்களை கடந்த பிப்ரவரி கடைசி வாரத்தில் மும்பை வைரச்சந்தைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அவரது வைரங்கள் மீண்டும் மும்பை சந்தைக்கு குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்ததே, +11 ரக வைரங்களின் விலை திடீரென சரிந்ததற்கு காரணம் என்று வைர தரகர்கள் கூறுகின்றனர்.
சூரத் வைர வியாபாரிகள் சங்க தலைவர் பாபு குஜராத்தி கூறுகையில், பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது, அரசியல் தலைவர்கள் தங்களது கருப்பு பணத்தை, வைரங்களாக வாங்கி முதலீடு செய்தனர். தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவரால், அப்போது 2 லட்சம் கேரட் வைரங்கள் வாங்கப்பட்டதை, இதற்கு உதாரணமாக கூறலாம்.
தற்போது அது மீண்டும் விற்பனைக்காக மும்பைக்கு வந்ததால், விலை குறைவுக்கு காரணம் என்றார்.