நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக 16 இடங்களில் வெற்றி பெறும்; அதிமுக 12, அமமுக 2, இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டிவி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல்முறையாக கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத நிலையில் தேர்தல் நடப்பது, பலரின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் - புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில், திமுக கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என்று, இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. இவை, கடந்த மார்ச் 1 முதல் 7ஆம் தேதி வரை, 193 மக்களவை தொகுதிகளில் 38,600 பேரிடம் கருத்து கேட்டறிந்தன.
அதன்படி தமிழகத்தில், அதில் திமுக 16 இடங்களிலும் , அதிமுக 12 இடங்களிலும் வெற்றி பெறும். டிடிவி தினகரனின் அமமுக மற்றும் பாமக தலா 2 இடங்களிலும், மற்றவை ஒரு இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக, அது கூறுகிறது.
விஜயகாந்த் மற்றும் ' நீ' புகழ் பிரமலதாவின் தேமுதிக, இத்தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது; அக்கட்சி ஒரு இடத்திலும் கூட வெற்றி பெறாது என்று, கருத்து கணிப்பு மேலும் தெரிவிக்கிறது.
இதனிடையே, ஏபிபி சி-வோட்டர் தரப்பில் மற்றொரு கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மொத்தம் உள்ள 543 இடங்களில், பாஜக கூட்டணி 264 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 141 இடங்களிலும், மற்றவை 138 இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்று கூறியுள்ளது.
உத்திரபிரதேசத்தில், 80 தொகுதிகளில் மாயாவதி-அகிலேஷ் கூட்டணிக்கு 47, பாஜக கூட்டணிக்கு 29 கிடைக்கும்; மேற்கு வங்கத்தில் 8 இடங்களை பாஜக அணி, 34 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் பிடிக்க வாய்ப்புள்ளது என்று அது மேலும் தெரிவிக்கிறது.