தேர்தல் கூட்டணி குறித்து சென்னையில் பேட்டி அளித்த போது ஆவேசப்பட்ட பிரேமலதா, செய்தியாளர்களை ஒருமையில் பேசினார். இதற்கு செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கொந்தளித்தார்.
கூட்டணி பற்றிய கேள்விக்கு, ஆக்க பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்க வேண்டும் என்ற அவர், இரண்டு நாட்களில் இதுபற்றி அறிவிப்பதாகவும் கூறினார். மணமகள் இருந்தால், 10 பேர் வந்து பார்த்துவிட்டு தான் செல்வார்கள் என்றார் அவர்.
துரைமுருகன் சந்திப்பு என்ற சாதாரண விவகாரத்தை சூழ்ச்சி மூலமாக திமுக பூதாகரமாக்கி விட்டது. தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று பிரேமலதா குற்றம்சாட்டினார்.
கேள்வி கேட்ட நிருபரிடம், "நீ எந்த தொலைக்காட்சி" என்று ஒருமையில் பேசினார். கூட்டணி பற்றி எப்போது வேண்டுமானாலும் விளக்கம் தருவோம். நீங்கள் வாசலில் உட்கார்ந்து இருப்பீர்கள் என்பதற்காக நான் விளக்கம் தரமுடியாது என்று பிரேமலதா பொரிந்து தள்ளினார். கொள்கை இல்லை என்று உன்னிடம் யார் சொன்னது; நீயே போய் கேளு என, மற்றொரு செய்தியாளரை கடிந்து கொண்டார்.
ஒருமையில் பிரேமலதா பேசியதற்கு செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆவேசமாகவே பிரேமலதா பேசினார். அருகில் இருந்த சுதீஷ், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அன்புமணி ராமதாஸ் இதேபோல் ஆவேசப்பட்டு நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.