மதுரை சித்திரைத் திருவிழா நாளன்று தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நாளை விசாரிக்கிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப் 18-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் முக்கியத் திருவிழாவான சித்திரைத் திருவிழாவும் அந்த நாளில் களை கட்டியிருக்கும். தேர்தல் நாளுக்கு முதல் நாள் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. தேர்தல் நாளன்று காலையில் மீனாட்சியும், சொக்கநாதரும் அலங்கரிக்கப்பட்ட தேரில் உலா வரும் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
மறுநாள் 19-ந் தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி . கள்ளழகரை எதிர் சேவை கொண்டு வரவேற்க18-ந் தேதி பிற்பகல் முதலே பக்தர்கள் தயாராகி விடுவார்கள்.
சித்திரைத் திருவிழா கொண்டாட்டங்களில் பல லட்சம் தென் மாவட்ட மக்கள் பங்கேற்பர் என்பதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதே கோரிக்கையை முன்வைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பார்த்தசாரதி என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் என்று அறிவித்துள்ளனர்.