மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் த.ம.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி. இந்த மோதலின் ஒருகட்டமாக, தமுமுகவுக்குள் நடந்து வந்த பல்வேறு உள்ளடி வேலைகளை 18 பக்க கடிதங்களாக வெளியிட்டிருந்தார்.
அந்தக் கடிதத்தில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய கைதிகளுக்கு நிதி திரட்டும் பணியில் நடந்த குளறுபடி, ராஜ்யசபா தேர்தலில் கனிமொழியை ஆதரிக்க 6 கோடி ரூபாய் வாங்கிய குற்றச்சாட்டு, ஜெயலலிதாவிடம் கடைசி நாள் வரையில் சட்டமன்றத்தில் புகழ்பாடும் வேலையைத்தானே செய்தீர்கள் என ஸ்டாலின் விமர்சனம் செய்தது பல விஷயங்களை அம்பலப்படுத்தியிருந்தார்.
இந்த 18 பக்க கடிதமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் என ஜவாஹிருல்லா எதிர்பார்க்கவில்லை. அமைப்புக்கு எதிராக சதிவேலைகளைத் தொடர்ந்து செய்கிறார் ஹைதர் அலி எனக் காட்டமான விமர்சனங்களை மமகவினர் முன்வைத்தனர்.
ஹைதர் அலியின் செயல்பாடு குறித்து அறிக்கை வெளியிட்ட ஜவாஹிருல்லா, சகோதரர் ஹைதர் அலியின் 18 பக்கம் கடிதம் குறித்து ஒரு விளக்கம் எனத் தலைப்பிட்டு, ' தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ் ஹைதர் அலி அவர்கள் அமைப்பின் கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 5.2019 அன்று ஒரு ரகசிய கூட்டத்தை நாகர்கோவிலில் நடத்தியுள்ளார்.
இது குறித்து தமுமுக தலைமை நிர்வாகக் குழு நிறைவேற்றிய ஏகமனதான தீர்மானத்தின்படி சகோதரர் ஹைதர் அலிக்கும் அக்கூட்டத்தில் பங்குக் கொண்டவர்களுக்கும் விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பட்டது. இந்நிலையில் விளக்கம் கேட்டு அனுப்பபட்ட கடிதத்திற்கு பதில் அளித்த சிலரின் கடிதத்தில் அவர்கள் அமைப்பின் விதிமுறைகளுக்கு முரணாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்குக் கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
அவர்களது விளக்கமும், அதில் தொனித்த மனோபாவமும் திருப்திகரமாக அமையவில்லை.
இதன் காரணமாக அவர்கள் தங்கள் வகிக்கும் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்கள்.
பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களும் அமைப்பின் விதிமுறைகளுக்கு முரணாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்குக் கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். அவர்களது கடிதமும் திருப்திகரமாக இல்லை. மிரட்டும் தொனியிலும், அவதூறுகளோடும் அக்கடிதம் இருந்தது. அதுகுறித்து மார்ச் 9 2019அன்று நடைபெறும் தலைமை செயற்குழுவில் விவாதிப்பது என்று தலைமை நிர்வாக குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
இச்சூழலில் சகோதரர் ஹைதர் அலி அவர்கள் தான் எழுதிய கடிதத்தை சமூக தளங்களில் வெளியிட்டுள்ளதுடன் பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ளார். அவதூறுகள் நிரம்பி வழியும் கடிதத்தைப் பரப்பிய சகோதரர் ஹைதர் அலி மீது நான் மான நஷ்ட வழக்கு தொடுக்கவுள்ளேன். 2013 மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கவிஞர் கனிமொழிக்கு வாக்களித்தற்காக 1 பைசா கூட நானோ எம்எல்ஏவாக இருந்த அஸ்லம் பாஷா வோ அல்லது கட்சியோபெறவில்லை என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். என் மீது அவதூறுகளை சுமத்தி என் பாவங்களை குறைத்த அவருக்கு நன்றி' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதன்பின்னர், இரண்டு தரப்பினரும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருவதால் கவலையடைந்த மமக மூத்த நிர்வாகிகள், சமசரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ' நமக்குள் சமாதானம் ஏற்படாவிட்டால் எதிரிகளுக்குத்தான் லாபம். இருவருமே விட்டுக் கொடுத்துப் போய்விடுவோம். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இருக்கும் அணியை ஆதரிப்போம். சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கேட்டுப் பெறுவோம்' எனப் பேசி முடிவெடுத்துள்ளனர். இந்த சமாதானத்தை ஹைதர் அலி தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
-அருள் திலீபன்